CricketArchive

இரானி கோப்பை: ரெஸ்ட் ஆப் இந்தியா 252
by CricketArchive


Scorecard:Rest of India v Delhi
Event:Irani Cup 2008/09

DateLine: 24th September 2008

 

வதோதரா: இரானி கோப்பை போட்டியின் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

 

கும்ளே தலைமையிலான ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணியும், வீரேந்திர ஷேவாக் தலைமையிலான (ரஞ்சிக் கோப்பை சாம்பியன்) டெல்லி அணியும் மோதும் (5 நாள் கொண்ட)இரானி கோப்பை போட்டி இன்று வதோதராவில் துவங்கியது.

 

ரெஸ்ட் ஆப் இந்தியா அணி சார்பாக வாசிம் ஜாபர், ராகுல் திராவிட், பத்ரிநாத், வி.வி.எஸ்.லட்சுமண், முகமது கைப், மஹேந்திரசிங் தோனி (விக்கெட் கீப்பர்), அனில் கும்ப்ளே (கேப்டன்), ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், ஆர்.பி.சிங் மற்றும் முனாப் படேல் ஆகியோர் களமிறங்கினர்.

 

டெல்லி அணி சார்பில் கௌதம் காம்பிர், ஆகாஷ்சோப்ரா, வீரேந்திர ஷேவாக் (கேப்டன்), மிதுன் மன்ஹாஸ், விராட் கோஹ்லி, ரஜத் பாட்டியா, புனித் பிஸ்ட் (விக்கெட் கீப்பர்), பிரதீப் சங்வான், சேட்டன்ய நந்தா, ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.

 

பூவா தலையா வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் கேப்டன் கும்ப்ளே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி வாசிம் ஜாபரும், ராகுல் திராவிட்டும் துவக்க வீரர்களாக களமிறங்கினார். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தனர்.

 

சிறப்பாக ஆடிய வாசிம் ஜாபர் சரியாக 50 ரன்கள் எடுத்திருந்த போது சேட்டன்ய நந்தா பந்துவீச்சில் விராட் கோஹ்லியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து திராவிட்டுடன் தமிழக வீரர் பத்ரிநாத் ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகநிதானமாக ஆடினர். திராவிட் 46 ரன்கள் எடுத்து, இஷாந்த் சர்மா பந்துவீச்சில் வெளியேறினார்.

 

இவரையடுத்து லட்சுமண் வந்தார். படுநிதானமாக ஆடிய பத்ரிநாத் 62 பந்துகளில் 16 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். லட்சுமணுடன் முகமது கைப் ஜோடி சேர்ந்தார். இவரும் தன் பங்கிற்கு படுநிதானமாக விளையாடினார். லட்சுமண் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து வந்த தோனி 5 ரன்களிலும், கும்ப்ளே 9 ரன்களிலும் விரைவாக வெளியேறினர். இந்த இருவரின் விக்கெட்டையும் பிரதீப் சங்வான் வீழ்த்தினார்.

 

மறுமுனையில் நின்றிருந்த கைப் 81 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்தபோது சேட்டன்ய நந்தா பந்துவீச்சில் காம்பீரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜாகீர்கான் ரன் ஏதுமின்றி வெளியேற, ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 187 ரன்களை சேர்ப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

 

டெயிலெண்டர்களான ஆர்.பி.சிங் 18 ரன்களும், முனாப் படேல் 10 பந்துகளில் 19 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். ஹர்பஜன்சிங் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 252 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை இழந்தது.

 

டெல்லி அணி சார்பில் இஷாந்த் சர்மா, பிரதீப் சங்வான், சேட்டன்ய நந்தா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஷேவாக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தபோது, முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.

 

டெல்லி அணியின் சார்பில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆகாஷ்சோப்ரா 16 ரன்களுடனும், கௌதம் காம்பிர் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் நான்கு நாள் ஆட்டம் மீதம் உள்ளது.

=====@======@=======

 

@ இப்போட்டியில் சிறப்பாக ஆடும் வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெறலாம் என்பதால் இரு அணி வீரர்களும் தங்களது முழுத்திறமையையும் காட்ட முனைந்தனர்.

 

@ இத்தொடருக்கான ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணியில் முன்னாள் கேப்டன் சௌவுரவ் கங்குலி இடம் கிடைக்கவில்லை. அணியில் இடம் பிடித்த நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் காயம் முற்றிலும் குணமடையாத காரணத்தினால் திடீரென விலகிக்கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive