CricketArchive

சாம்பியன்ஸ் டிராபி: ஒத்தி வைப்பு
by CricketArchive


Event:ICC Champions Trophy 2008/09

DateLine: 26th August 2008

 

வரும் செப்டம்பர் மாதம், பாகிஸ்தானில் நடைபெற இருந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர், பாதுகாப்பு காரணங்களுக்காக அடுத்த ஆண்டிற்க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அதிரடியாக அறிவித்துள்ளது.

 

இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட எட்டு நாடுகள் பங்கேற்கும் மினி உலக கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி, பாகிஸ்தானில் வரும் செப்டம்பர் 12 முதல் 28-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

 

ஆனால், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் முக்கிய வீரர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக போட்டியில் பங்கேற்க ஆரம்பத்திலிருந்தே அச்சம் தெரிவித்துவந்தனர். பாகிஸ்தானில் கடந்த ஜனவரியில் இருந்து 21 தற்கொலைப்படை தாக்குதல்கள் மற்றும் கண்ணிவெடி தாக்குதல்களில் நானூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி, போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுத்தனர்.

 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா விலகிக்கொள்வதாக கடந்த 22ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் போட்டித் தொடர் வேறு இடத்துக்கு மாற்றப்படும் அபாயம் இருந்தது. ஏனெனில் போட்டித் தொடர் பாகிஸ்தானில் நடைபெறாமல் போனால், வேறு நாட்டில் போட்டியை நடத்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் முன்பே தெரிவித்திருந்தது. இதனால், இலங்கையும், தென்னாப்பிரிக்காவும் போட்டி வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் எங்கள் நாட்டில் நடத்துகிறோம் என்று தனித்தனியே அறிவித்திருந்தன.

 

இந்நிலையில் போட்டி நடத்துவது பற்றி திட்டவட்டமாக முடிவெடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று முன்தினம் டெலி-கான்பரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியது. டெலி-கான்பரன்ஸின் போது சாம்பியன்ஸ் டிராபி வேறு நாட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டால் போட்டிகளை புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

 

டெலி-கான்பரன்ஸ் முடிந்த பிறகு, பேட்டியளித்த சர்வதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் டேவிட் மோர்கன்,“ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் பாதுகாப்பு குறித்த கருத்துகளை முன் வைத்து உள்ளன. அவற்றை ஒதுக்கிவிடமுடியாது. இச்சூழலில் போட்டியை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கும் முடிவை எடுத்துள் ளோம். இக்காலகட்டத்தில் நிலைமை ஓரளவு சீரடையும் என்று நம்புகிறோம். 2009ம் ஆண்டு போட்டியை நடத்தும் உரிமையை மீண்டும் பாகிஸ்தானே பெறுகிறது. பாதுகாப்பு பிரச்னைகள் தலைதூக்கும் பட்சத்தில் போட்டிகளை இடமாற்றம் செய்ய சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்க்கு உரிமை உள்ளது,”என்றார்.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive