CricketArchive

திலகரத்னே தில்ஷான்
by CricketArchive


Player:TM Dilshan

DateLine: 22nd August 2008

 

முழுப்பெயர்: திலகரத்னே முடியன்சேலகே தில்ஷான்

 

பிறப்பு: 14 அக்டோபர் 1976. கழுத்துறை, இலங்கை.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

அணியில் வீரரின் நிலை: ஆல்ரவுண்டர்.

 

பந்து வீச்சு முறை: வலதுகை சுழற்ப்பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: இலங்கை, ஆசிய லெவன், தெற்கு பஸ்னஹிரா அணி, சிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப், டெல்லி டேர்டெவில்ஸ், கழுத்துறை நகர கிரிக்கெட் அணி, புளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் தடகள கிளப் அணி, செபஸ்டியனிட்ஸ் கிரிக்கெட் மற்றும் தடகள கிளப் அணி.
அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: நவம்பர் 18-22, 1999 அன்று இலங்கை - ஜிம்பாப்வே இடையே புலவாயோவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி
ஒருதினப் போட்டி: டிசம்பர் 11, 1999 அன்று இலங்கை - ஜிம்பாப்வே இடையே புலவாயோவில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஆகஸ்டு 17, 2004 அன்று புளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் தடகள கிளப் அணி - போலிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் இடையே கொழும்புவில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இலங்கை அணியின் நடுவரிசை ஆட்டக்காரர். இலங்கையிலுள்ள கழுத்துறையில் பிறந்து வளர்ந்தவர். இவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் டுவான் மொஹமது தில்ஷான் ஆகும். பின்னாளில், இஸ்லாமிய சமயத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மாறினார். அதனால் திலகரத்னே தில்ஷான் என பெயரையும் மாற்றி வைத்துக் கொண்டார்.

 

1994-ல் இவர் தெற்கு புராவின்ஸ் அணியில் துவக்க ஆட்டக்காரராக இடம்பிடித்து விளையாடினார். இந்த அணியில் சிறப்பாக ஆடியதால் கழுத்துறை நகர கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். ஆண்டுகள் செல்லச் செல்ல கிரிக்கெட் திறமையும் வளர்ந்தது. இவரது திறமையான பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்து வீச்சு காரணமாக 1998-ல் இலங்கை ஏ அணியில் இடம்பிடித்து, தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கெதிரான தொடரில் விளையாடினார். இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த அணியில் விக்கெட் கீப்பராக இடம் பிடித்தார் என்பதுதான்.

 

நவம்பர் 1999, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியில் இடம்பிடித்தார். இதே அணிக்கெதிராக புலவாயோவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடி 163 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இத்தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, இதே அணிக்கெதிரான ஒருதினப் போட்டியிலும் அறிமுகமானார். இத்தொடரின் கடைசிப் போட்டியில் 53 ரன்கள் எடுத்து தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

 

2001-ல் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் பார்மை இழந்து தவித்ததால் அணியிலிருந்து விலக்கப்பட்டார். இதன்பிறகு கடுமையாக முயற்சி செய்து 2003-ல் மீண்டும் அணிக்குத் திரும்பினார். வந்த வேகத்தில் இவர் ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் விளையாடினார். இதன் விளைவாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கெதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

 

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 1 சதமும் இரண்டு அரை சதமும், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 1 சதமும் அடித்து தனது திறமையை நிரூபித்தார்.

 

2005-ல் இந்தியன் ஆயில் கோப்பை தொடரில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசி 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும் ஒருதின அரங்கில் தனது சிறந்த பநதுவீச்சையும் பதிவு செய்தார்.

 

2005-ல் வங்கதேசத்திற்கெதிரான முதல் டெஸ்டில் 86 ரன்கள் குவித்தார். இதே அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 179 பந்துகளில் 169 ரன்களைக் குவித்து டெஸ்ட் அரங்கில் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார். மேலும் இத்தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இதே அணிக்கெதிரான ஒருதினத் தொடரில் சிறப்பாக பந்து வீசி 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் வங்கதேச அணி டெஸ்ட் தொடரை மட்டுமின்றி, ஒருதினத் தொடரையும் இழந்தது.

 

இவரது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக இலங்கை அணியின் நடுவரிசை ஆட்டக்காரராக திகழ்கிறார். இவர் பேட்ஸ்மேன் மட்டுமல்ல சிறந்த சுழற்பந்து வீச்சாளர். சிறந்த பீல்டர் என சகல துறைகளிலும் செயல்படுபவர்.

 

2006-ல், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வி.பி. கோப்பை தொடரின் முதல் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியினரில் 4 பேரை தனது துடிப்பான பீல்டிங்கால் ரன்அவுட் செய்து வெளியேற்றினார். இப்போட்டியில் இலங்கை வென்றது. இது இவரது சிறப்பான பீல்டிங் திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.

 

2006-ல் நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்த ஒருதின அணியில் இடம் பெற்றார். இரு அணிகளும் மோதிய முதல் ஒருதினப் போட்டியில் 117 ரன்கள் குவித்து, ஒருதின அரங்கில் தனது முதல் சதத்தையும், அதிகபட்ச ரன்னையும் பதிவு செய்தார். இப்போட்டியில் இலங்கை அணி 443 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இதே அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் 66 ரன்கள் குவித்தார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட, 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார்.

 

2008-ல், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வங்கி தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்கள் உள்பட 170 ரன்கள் குவித்தார்.

 

அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 1 அரைசதம் உள்பட 134 ரன்கள் குவித்தார்.

 

இதையடுத்து இந்திய அணியுடன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரிலும், செப்டம்பரில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடரிலும் இடம் பிடித்துள்ளார்.

 

வெளியான தேதி: 21 ஆகஸ்டு 2008.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive