Player: | S Badrinath |
DateLine: 19th August 2008
முழுப்பெயர்: சுப்ரமணியம் பத்ரிநாத்
 
பிறப்பு: ஆகஸ்டு 30, 1980, சென்னை, தமிழ்நாடு, இந்தியா. 
மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர் 
பந்து வீச்சு முறை: வலதுகை சுழற்ப்பந்து வீச்சாளர் 
அணியில் வீரரின் நிலை: பேட்ஸ்மேன் 
விளையாடிய அணிகள்: இந்தியா, இந்தியா ஏ, தமிழ்நாடு அணி, இந்தியா ரெட், சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தியா பிரசிடென்ட் லெவன். 
அறிமுகம்: 
டெஸ்ட் போட்டி: இன்னும் அறிமுகமாகவில்லைஒருதினப் போட்டி: ஆகஸ்டு 20, 2008 அன்று இந்தியா - இலங்கை இடையே தம்புல்லாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஏப்ரல் 3, 2007 அன்று ஆந்திரா - தமிழ்நாடு இடையே விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
 
இந்தியா கிரிக்கெட் அணியின் புதிய பேட்ஸ்மேன். இந்தியாவின் முக்கிய மெட்ரோபாலிட்டன் நகரங்களில் ஒன்றான சென்னையில் பிறந்தவர். 
தமிழ்நாடு அணிக்காக விளையாடிய போது ரன் எடுக்கும் இயந்திரமாக இருந்தவர். 2005-06 காலகட்டத்தில் 7 (உள்ளூர்) போட்டிகளில் விளையாடி 636 ரன்கள் குவித்தார். ஒரு போட்டியில் சாராசரியாக 80 ரன்களுக்கும் மேல் அடித்தார். 2006-07 காலகட்டத்தில் 436 ரன்கள் குவித்தார். ஒரு போட்டியில் சாராசரியாக 50 ரன்களுக்கும் மேல் அடித்தார். 
பாயிண்ட் திசையில் மிகச்சிறந்த பீல்டராக செயல்படுபவர். மேலும் தனது திறமையான பேட்டிங்கால் பந்துவீச்சாளருக்கு நெருக்கடி கொடுப்பார். 
இவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் 2007-ம் ஆண்டில் ஜிம்பாப்வே மற்றும் கென்யாவிற்கு எதிரான இந்திய ஏ அணியில் இடம்பிடித்தார். மேலும், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கெதிரான தொடரிலும் இடம் பிடித்தார். 
2007 அக்டோபரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய ஒருதின அணியில் இடம்பிடித்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட இவர் களமிறக்கப்படவில்லை. இதையடுத்து வந்த பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. இத்தனைக்கும் இவர் 2007-08 ரஞ்சிக்கோப்பை தொடரில் 659 ரன்கள் குவித்து தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார். இருப்பினும் இவர் இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 
இதனிடையே, இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 
இந்த அணிக்காக, மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்கள் உள்பட 192 ரன்கள் குவித்தார். இந்த அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது என்பது குறிப்பிடத் தக்கது. 
இதையடுத்து ஜூலை- 2008, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற எமெர்ஜிங் பிளேயர்ஸ் கிரிக்கெட் போட்டித் தொருக்கான இந்திய நேஷனல் கிரிக்கெட் அகாதெமி அணியில் இடம் பிடித்து விளையாடினார். இத்தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்கள் உள்பட 240 ரன்கள் குவித்தார். 
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஒருதினத் தொடரில் சச்சின் தெண்டுல்கருக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக பத்ரிநாத் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையே தம்புல்லாவில் நடைபெற்ற இரண்டாவது ஒருதினப்போட்டியில் அறிமுகமானார். தமிழக வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் களமிறங்கும் முதல் சர்வதேசப் போட்டி இது என்பதும், இந்தியாவின் சார்பில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகும் 176-வது ஒருதின வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். இப்போட்டியில் அணி இக்கட்டான சூழலில் இருந்த போது, கேப்டன் தோனியுடன் இணைந்து நிதானமாக ஆடி அணியை வெற்றி பெறவைத்தார். 
தற்போது இந்திய ஏ அணியின் கேப்டனாக பொறுப்பேற்று ஆஸ்திரேலிய ஏ, நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையேயான முத்தரப்புத் தொடரில் விளையாடி வருகிறார். 
கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08