Player: | VVS Laxman |
DateLine: 18th August 2008
முழுப்பெயர்: வங்கிபுரப்பு வெங்கடசாயி லட்சுமண்
 
பிறப்பு: நவம்பர் 1, 1974. ஹைதராபாத், ஆந்திரபிரதேசம், இந்தியா. 
மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர் 
பந்து வீச்சு முறை: வலதுகை சுழற்பந்து வீச்சாளர் 
அணியில் வீரரின் நிலை: மட்டை வீச்சாளர் 
விளையாடிய அணிகள்: இந்தியா, டெக்கான் சார்ஜர்ஸ், ஹைதராபாத், லாங்கஷையர். 
அறிமுகம்: 
டெஸ்ட் போட்டி: நவம்பர் 20-23, 1996, இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே அஹமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.ஒருதினப் போட்டி: ஏப்ரல் 9, 1998 அன்று இந்தியா - ஜிம்பாப்வே இடையே கட்டாக்கில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஏப்ரல் 20, 2008 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெக்கான் சார்ஜர்ஸ் இடையே கொல்கத்தாவில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
 
இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளுக்கென்றே விளையாடும் வீரர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதினை முன்மாதிரியாகக் கொண்டவர். இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவர் வி.வி.எஸ். லட்சுமண். 
ஹைதராபாத்திலுள்ள மருத்துவ தம்பதிகளுக்கு பிறந்தவர். அதனால் இவரையும் மருத்துவம் படிக்க வைக்க நினைத்தனர். இருப்பினும் கிரிக்கெட்டின் மேல் உள்ள ஆர்வத்தால் பள்ளி படிப்பு முடிந்ததும், இவர் கிரிக்கெட்டில் நுழைந்து விட்டார். 
சர்வதேச அரங்கில் நவம்பர் 20-23, 1996, இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே அஹமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக அறிமுகமானார். ஆனால் ஒருதினப்போட்டியில் இவர் அறிமுகமாவதற்கு 2 ஆண்டுகள் பிடித்தது. 
ஒருதினப் போட்டியில் இவர் முதன்முதலாக, ஏப்ரல் 9, 1998 அன்று இந்தியா - ஜிம்பாப்வே இடையே கட்டாக்கில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமானார். 
இவர் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். 1999-2000ல் சச்சின் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரில் விளையடியது. இத்தொடரின் மூன்றாவது டெஸ்டில் 167 ரன்கள் குவித்தார். 
2001-ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. மார்ச் 11, 2001-ல் கல்கத்தாவில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைக் குவித்தது. இந்திய அணியோ 171 ரன்கள் எடுத்து பாலோ ஆன் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் திராவிட்டுடன் (180 ரன்கள்) ஜோடி சேர்ந்த வி.வி.எஸ். லட்சுமண் (243 ரன்கள்) ஆட்டத்தையே மாற்றிக் காட்டினார். இப்போட்டியில் தோல்வியின் விளிம்பிலிருந்த இந்திய அணி இவ்விருவரின் அபாரமான ஆட்டத்தால் 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இவர் மட்டுமே அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
டெஸ்ட் தொடர் முடிந்ததும், அடுத்து இதே அணியுடன் நடைபெற்ற ஒரு தினத் தொடரில் இரண்டு அரைசதங்களை விளாசினார், கடைசி ஒருதினப்போட்டியில் தனது முதல் சதத்தை கடந்தார். 
இதற்கு முன் இவரது ஆட்டத்திறமையை கடுமையாக விமர்சித்தவர்களெல்லாம் இப்போட்டிக்குப் பிறகு இவரை வாயார பாராட்டினர். இதன்காரணமாக இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒரு தின அணியில் தொடர்ந்து இடம்பிடித்துவந்தார். 
மறுபடியும் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக தனது ரன் வேட்டையை அவர்களது சொந்தமண்ணில் நிகழ்த்திக்காட்டினார். 2003-04 ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. 
முதல் டெஸ்டில் 75, இரண்டாவது டெஸ்டில் 148 ரன்கள் எடுத்தார். 4வது டெஸ்டில் சச்சின் தெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்த வி.வி.எஸ். லட்சுமண் 178 ரன்கள் எடுத்தார். இவரது ஆட்டத்தால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனானது. 
இது முடிந்ததும் இந்த இருநாடுகளுடன் ஜிம்பாப்வே அணியுடன் கலந்து கொண்டு முத்தரப்பு ஒருதினத் தொடரில் விளையாடியது. அத்தொடரில் இவர் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இரண்டு சதங்களை விளாசினார். ஜிம்பாப்வே அணியுடன் மோதிய போட்டியில் 131 ரன்கள் குவித்தார். இதுவே ஒருதினப்போட்டியில் இவரது அதிகபட்ச ரன்களாகும். 
இதற்குப் பிறகு டெஸட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், ஒரு தினத் தொடரில் இவரது இடம் நிலையற்றதாக இருந்தது. அதன்பிறகு இவர் அணியில் இடம்பெறுவதும், நீக்கப்படுவதுமாக இருந்தார். 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக தலைமையேற்று அணியை வழிநடத்திச் சென்றார். ஆனால், இடையில் காயம் காரணமாக விளையாடவில்லை. இவருக்கு பதில் இவரது அணியை ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் வழிநடத்தினார். 
அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்து விளையாடினார். 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்கள் உள்பட 215 ரன்கள் குவித்தார். இத்தொடரின் முடிவில் டெஸ்ட் போட்டிகளில் சரியாக 6000 ரன்களைத் தொட்டார். 
இவர் திறமை வாய்ந்த வீரர் என்பது மட்டுமல்ல, களத்தில் அதிக நேரம் நின்று அற்புதமாக விளையாடக் கூடியவர். எவ்வளவு வேகமாக பந்தை எறிந்தாலும், சுழன்று வந்தாலும் அவற்றை அநாசயமாக தடுத்து ஆடுவதில் வல்லவர். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற வீரர். 
கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08