Player: | PA Patel |
DateLine: 18th August 2008
முழுப்பெயர்: பார்தீவ் அஜய் படேல்.
 
பிறப்பு: 9 மார்ச் 1985. அஹமதாபாத், குஜராத், இந்தியா. 
மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர் 
அணியில் வீரரின் நிலை: மட்டை வீச்சாளர் , விக்கெட் கீப்பர் 
விளையாடிய அணிகள்: இந்தியா, குஜராத், ராஜஸ்தான் லெவன், இந்தியா கிரீன், சென்னை சூப்பர் கிங்ஸ். 
அறிமுகம்: 
டெஸ்ட் போட்டி: ஆகஸ்ட் 8-12, 2002, இந்தியா - இங்கிலாந்து இடையே நாட்டிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.ஒருதினப் போட்டி: ஜனவரி 4, 2003 அன்று இந்தியா - நியூலாந்து இடையே குயின்ஸ்டவுனில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: செப்டம்பர் 15, 2005 அன்று சிலாவ் மரியன்ஸ் கிளப் - பி.சி.ஏ. மாஸ்டர்ஸ் லெவன் இடையே லீசெஸ்டரில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
 
இந்திய அணியின் மற்றொரு இளம் விக்கெட் கீப்பர். அதிரடி ஆட்டக்காரர். மிக இளம் வயதில், இந்திய அணிக்கு வந்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். பேட்டிங்கில் அசத்துபவர். கீப்பிங் பணியிலும் சிறப்பாக செயல்படுபவர். 
குஜராத்திலுள்ள அஹமதாபாத்தில் பிறந்தவர். 1996 முதல் இவரது பள்ளியின் சார்பாக கிரிக்கெட் விளயாட ஆரம்பித்தார். 1998-ல், 14 வயதுக்குள்பட்டோருக்கான குஜராத் அணியில் தேர்வு செய்யப்பட்டார். 
டிசம்பர் 2000-த்தில் 16 வயதுக்குள்பட்டோருக்கான குஜராத் அணியின் சார்பாக விளையாடிய இவர், மஹாராஷ்டிரா அணிக்கெதிராக விக்கெட் கீப்பராகவும், தொடக்க ஆட்டக்காரராகவும் விளையாடினார். அப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 196 பந்துகளில் 101 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 297 பந்துகளில் (ஆட்டமிழக்காமல்) 201 ரன்களும் எடுத்து பாலோ ஆன் அக இருந்த இவரது அணியை காப்பாற்றினார். 
19 வயதுக்குள்பட்டோருக்கான மேற்கு பகுதி அணிக்கான கேப்டான நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 15 என்பது குறிப்பிடத் தக்கது. 
இதன்பின்னர் 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். ரோஜர் பின்னியிடம் பயிற்சி பெற்று தனது திறமையை வளர்த்துக் கொண்டார். இதன் காரணமாக 17 வயதுக்குள்பட்டோருக்கான தேசிய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று 2001-ம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பையை வென்றது மட்டுமின்றி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஆறு வார கால ஸ்காலர்ஷிப்பையும் பெற்றார். 
நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பை 2002- ற்கான போட்டியின் இந்திய அணியின் கேப்டான நியமிக்கப்பட்டார். இதே ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய ஏ அணியில் இடம்பிடித்தார். 
இவரது திறமையான செயல்பாடுகள் காரணமாக, இதே ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். இரு அணிகளுக்கும் இடையே நாட்டிங்காமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் காயம் காரணமாக அப்போதைய கீப்பர் அஜய் ராத்ராவிற்கு பதில் பார்தீவ் படேல் களமிறக்கப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் விக்கெட் கீப்பரானவர் என்ற சாதனையைப் படைத்தார். அப்போது இவரது வயது 17 ஆண்டு 152 நாட்கள். இவருக்கு முன் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ஹனீப் முகமது (17 ஆண்டு 300 நாட்கள்)தான் மிகவும் இளம் வயது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார். அதை பார்தீவ் பேடல் முறியடித்தார். 
இவர் களமிறங்கிய முதல் டெஸ்டின், முதலாவது இன்னிங்ஸில் 0 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் 1 மணி நேரம் களத்தில் நின்று (19 ரன்களுடன்) இங்கிலாந்து அணியின் வெற்றியை தடுத்தார். அந்த போட்டி டிராவில் முடிவடையக் காரணமாக இருந்தார். 
2002-03 -ல் மேற்கிந்தியத் தீவுகள் இந்திய வந்து விளையாடியது. அத்தொடரில் தனது கீப்பிங் திறமையை வெளிப்படுத்தினார். பேட்டிங்கின் போது சுழற்பந்து வீச்சுகளை சமாளிப்பதில் சிரமப்பட்டார். 
2003-04 -ல் சிட்னியில் நடைபெற்ற 4 வது டெஸ்ட் போட்டியில் பிரெட் லீ, நாதன் பிராக்கென் போன்ற வேகங்களின் பந்துவீச்சுகளை அதிரடியாக அடித்து நொறுக்கி 50 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். 
இதே ஆண்டில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த இந்திய டெஸ்ட் அணியில் விளையாடினார். இரண்டாவது டெஸ்டில் சோயிப் அக்தர், முகமது சமி போன்ற வேகங்களை அற்புதமாக சமாளித்து 62 ரன்கள் விளாசினார். இத்தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி 69 ரன்கள் அடித்து அசத்தினார். இப்போட்டியில் மட்டுமின்றி இத்தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. 
அதன்பிறகு ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்த போது, இவரது ஆட்டமுறை திருப்தி அளிக்காததால் அணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். இவருடைய இடத்திற்கு தினேஷ் கார்த்திக் வந்தார். ஒரு தினத் தொடரில் இவருக்கு குறைந்த அளவே வாய்ப்பளிக்கப்பட்டது. 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கியவர், மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்கள் உள்பட 302 ரன்கள் குவித்தார். இந்த அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது என்பது குறிப்பிடத் தக்கது. 
அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த டெஸ்ட் அணியில் தோனி ஓய்வு காரணமாக விலகினார். இதானால் மீண்டும் பார்தீவ் படேல் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடினார். இவர் ஒருதின அணியில் இடம்பிடித்திருந்தாலும், ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 
கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08