Player: | I Sharma |
DateLine: 18th August 2008
முழுப்பெயர்: இஷாந்த் சர்மா
 
பிறப்பு: செப்டம்பர் 2, 1988, தில்லி, இந்தியா. 
மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர் 
பந்து வீச்சு முறை: வலதுகை வேகப்பந்து வீச்சாளர் 
அணியில் வீரரின் நிலை: பந்துவீச்சாளர் 
விளையாடிய அணிகள்: இந்தியா, டெல்லி, இந்தியா ரெட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், வடக்கு மண்டல அணி. 
அறிமுகம்: 
டெஸ்ட் போட்டி: மே 25-27, 2007, இந்தியா - வங்கதேசம் இடையே தாஹாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.ஒருதினப் போட்டி: ஜூன் 29, 2007 அன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே பெல்பாஸ்டில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஏப்ரல் 3, 2007 அன்று டெல்லி - இமாச்சல பிரதேசம் இடையே தில்லியில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
 
இந்தியா கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்துவீச்சாளர். டெல்லியில் பிறந்தவர். தனது 14 வயதிலிருந்து கிரிக்கெட்டில் முழு மூச்சாக இறங்கினார். தனது 18வதுவயதில் டெல்லி அணியில் இடம்பிடித்து ரஞ்சிக்கோப்பையில் விளையாடினார். முதல் தரப்போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார். 4 முதல்தரப்போட்டிகளில் கலந்துகொண்டு 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியதேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். 
19வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து 2006 இங்கிலாந்திற்கும், 2006-07 ல் பாகிஸ்தானிற்கும் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருதினப் போட்டிகளில் விளையாடினார். 
இச்சமயத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல் காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட, மே -2007ல் வங்கதேசம் சென்ற இந்திய அணியில் இஷாந்த் சர்மா இடம்பிடித்தார். 
மே 25-27, 2007, இந்தியா - வங்கதேசம் இடையே தாஹாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவர் முதன்முதலாக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 9 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டை வீழ்த்தினார். இப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. 
ஜூன் 29, 2007 அன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே பெல்பாஸ்டில் நடைபெற்ற ஒருதினப் போட்டியிலும் அறிமுகமானார். ஒருதினப்போட்டிகளிலும் சிறப்பாகவே பந்துவீசி வருகிறார். 
அதன்பிறகு டிசம்பரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடியது. மூன்றாவது டெஸ்டின்போது இந்திய பந்துவீச்சாளர்கள் ஸ்ரீசாந்த் , ஜாகிர்கான், ஆர்.பி.சிங் ஆகியோர் காயம் காரணமாக விளையாடாததால் இஷாந்த் சர்மா இந்த டெஸ்டில் சேர்க்கப்பட்டார். அதில் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டி டிரா ஆனது. 
இதன்பிறகு 2008 ஜனவரியில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றது. முதல் டெஸ்டில் ஜாகிர்கான் காயமடைய, இரண்டாவது டெஸ்டில் இவர் சேர்க்கப்பட்டார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீச ஆண்ட்ரு சைமண்ட்ஸ் அதை தட்டிவிட, கீப்பர் தோனியிடம் தஞ்சமடைந்தது. ஆனால் நடுவரான ஸ்டீவ் பக்னர் அதை மறுத்துவிட்டார். 
இத்தொடரின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் இவரைப் பார்த்து 'இவர் உண்மையாகவே திறமையான வீரர். இவரிடம் கவனமாக விளையாட வேண்டும். இல்லையெனில் நம்மை சாய்த்து விடுவார்' என்று புகழ்ந்தார். 
இதே ஆஸ்திரேலிய அணிக்கெதிராக காமன்வெல்த் பேங்க் ஒருதினத் தொடரின் 5 வது போட்டியில் அந்த அணியின் முக்கியமான 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணி வெற்றிக்கு உதவினார். அப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டியில் இவரது பந்துவீச்சு அதிவேகமாக இருந்தது. அதாவது 149.5 km/h வேகத்தில் பந்து வீசினார். இதுவரை இந்திய அணியில் உள்ள வேகப்பந்து வேதாளங்களில், ஆஷிஷ் நெஹ்ரா 2003 உலகக்கோப்பை போட்டியின்போது ஜிம்பாப்வே அணிக்கெதிராக 149.7 km/h வேகத்தில் பந்து வீசியிருந்தார். 
இந்த சாதனையை இதற்கு அடுத்தவாரத்திலேயே இவர் முறியடித்தார். பிப்ரவரி 17 அன்று, ஆஸ்திரேலிய அணிக்கெதிராக மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் 153.0 km/h வேகத்தில் பந்து வீசி அசத்தினார். 
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். இப்போட்டித் தொடரில் 950,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்து இந்த அணிக்காக வாங்கப்பட்டார். இத்தொடரில் அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்ட பநந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். இதில் 13 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
இதையடுத்து வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் பங்கேற்றார். பின்னர் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை போட்டித்தொடரில் 5 ஆட்டங்களில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்து விளையாடினார். டெஸ்ட் தொடரின் போது இவருக்கு காயம் ஏற்பட்டதால் இதே அணிக்கெதிரான ஒருதினத் தொடரில் இருந்து விலகிக் கொண்டார். 
சிறந்த வேகப்பந்து வீச்சாளர். இன்ஸ்விங், அவுட்ஸ்விங், யார்க்கர் வீசுவதில் வல்லவர். சுருங்கச் சொன்னால் இந்திய அணியில் வளர்ந்துவரும் வேகப்பந்து வேதாளம். 
கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08