CricketArchive

பயிற்சி ஆட்டம் டிரா..! சச்சின் ஆறுதல்
by CricketArchive


Scorecard:Sri Lanka Board XI v Indians
Event:India in Sri Lanka 2008

DateLine: 22nd July 2008

 

இந்திய அணியும் இலங்கை போர்டு லெவன் அணியும் மோதிய பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

 

இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வரும் 23ம் தேதி கொழும்புவில் துவங்குகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணி, இலங்கை போர்டு லெவன் அணியுடன் மூன்று நாள் பயிற்சி போட்டி ஒன்றில் மோதியது.

 

பூவா தலையா வென்ற வென்ற இலங்கை போர்டு லெவன் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

 

துவக்க வீரர்களாக வந்த தரங்கா 6 ரன்களுடனும், உடாவடே 7 ரன்களுடனும் விரைவில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். கபுகேதரா 1 ரன்னுடன் வந்த வேகத்தில் வெளியேற, இலங்கை லெவனுக்கு சிக்கல் ஏற்பட்டது. இலங்கை லெவன் 22 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்து திணறியது. கேப்டன் ஜீகன் முபாரக் 25 ரன்கள் எடுத்தார்.

 

அடுத்து வந்த சமரசில்வா, கந்தம்பியுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. அபாரமாக விளையாடிய கந்தம்பி அரைசதம் கடந்தார். இந்நிலையில் திடீரென மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. கந்தம்பி 11 பவுண்டரிகள் உட்பட 84 ரன்கள் எடுத்தநிலையில் முனாப் படேல் பந்து வீச்சில் பெவிலியன் திரும்பினார். அரைசதம் கடந்த சமரசில்வா 68 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன் சுழலில் சிக்கினார். டெயிலெண்டர்களை கேப்டன் அனில் கும்ப்ளே கவனித்து கொண்டார். இலங்கை போர்டு லெவன் அணி 71.5 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா சார்பில் அனில் கும்ப்ளே 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரிலே காம்பிர் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட்டை இழந்து அதிர்ச்சி அளித்தது. போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிக்கப்பட்டது. ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்து இருந்தது.

 

இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறும் வேளையில் மழை பெய்ததை அடுத்து, ஆட்டம் உணவு இடைவேளைக்கு பின்னர் துவங்கியது. காற்றில் அதிக ஈரப்பதம் இருந்ததை இலங்கை லெவன் பந்து வீச்சாளர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள, இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர்.

 

பொறுப்பில்லாமல் விளையாடிய டிராவிட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரம் இலங்கை பந்துவீச்சை சமாளித்த வீரேந்திர ஷேவாக் 27 ரன்கள் எடுத்திருந்தபோது ஹெராத் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

 

சௌவுரவ் கங்குலி 14 ரன்கள் எடுத்திருந்தபோது தம்மிகா பிரசாத் பந்து வீச்சில் பெவிலியன் திரும்பி, அதிர்ச்சி அளித்தார்.

 

அடுத்து வி.வி.எஸ். லட்சுமண் வந்தார். இவரும் அதே ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெறுப்பேற்றினார். முன்வரிசை ஆட்டக்காரர்கள் சொல்லி வைத்தார் போல் வரிசையாக வெளியேற, இந்திய அணி 80 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது.

 

இந்நிலையில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், சூழ்நிலையை அறிந்து பொறுப்பாக விளையாடினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கை தந்தார். அதிரடியாக விளையாடிய இவர் ஒரு சிக்சர், 8 பவுண்டரியுடன் 76 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்தபோது பிரசன்னா பந்து வீச்சில் கவுசல் சில்வாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்து, அணியின் மானத்தை காப்பாற்றியது.

 

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட இவர், முதல் டெஸ்டில் தோனியின் இடத்தை கைப்பற்ற தன்னை தயார்படுத்தி கொண்டார். ஹர்பஜன்சிங் 12 ரன்களிலும், ஜாகிர்கான் 1 ரன்னிலும் வெளியேறினர். இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 49 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து, 28 ரன்கள் பின்தங்கியிருந்தது. தினேஷ் கார்த்திக் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. ஆட்டம் துவங்குவதற்கு சற்று முன் இந்திய அணி முதல் இன்னிங்சை ‘டிக்ளேர்’ செய்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை லெவனுக்கு துவக்கத்திலேயே ஜாகிர்கான் அதிர்ச்சி அளித்தார். இவர் தரங்காவை 5 ரன்களில் வெளியேற்றினார்.

 

கபுகேதரா 22 ரன்களும், கந்தம்பி 27 ரன்களும் எடுத்து அணிக்கு ஓரளவு ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய கேப்டன் ஜீகன் முபாரக் 41 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் அபாரமாக பேட் செய்த சமரசில்வா அரைசதம் கடந்தார். இலங்கை லெவன் 55 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து, ‘டிக்ளேர்’ செய்தது. சமரசில்வா 59, பிரசாத் 43 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

இதையடுத்து இந்திய அணிக்கு 279 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துவக்க வீரர்களாக களமிறங்கிய வீரேந்திர ஷேவாக், கௌதம் காம்பிர் ஜோடி ஒரு நாள் போட்டி போல் அதிரடி காட்டியது. 14 பந்தில் 14 ரன்கள் எடுத்த வீரேந்திர ஷேவாக் பவுண்டரிக்கு ஆசைப்பட்டு, கபுகேதராவிடம் பிடி கொடுத்து வெளியேறினார். டிராவிட் 26 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் ஏமாற்றிய காம்பிர் இம்முறை சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். இந்திய அணி ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. இதையடுத்து போட்டி ‘டிரா’ ஆனதாக அறிவிக்கப்பட்டது. காம்பிர் 60 ரன்களுடனும், கங்குலி 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

பயிற்சி போட்டி முடிந்ததை தொடர்ந்து, இந்தியா-இலங்கை மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி கொழும்புவில் துவங்குகிறது.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive