CricketArchive

ஆசியக்கோப்பையை வென்றது இலங்கை..!
by CricketArchive


Scorecard:India v Sri Lanka
Player:BAW Mendis
Event:Asia Cup 2008

DateLine: 8th July 2008

 

போட்டி: 50 ஓவர்கள் போட்டி (பகலிரவுப் போட்டி)
இடம்: நேஷனல் மைதானம். கராச்சி, பாகிஸ்தான்.
தேதி: 06.07.2008. வியாழக்கிழமை.
மோதிய அணிகள்: இலங்கை அணி - இந்திய அணி
முடிவு: 100 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி
ஆட்ட நாயகன்: அஜந்தா மெண்டிஸ்

வணக்கம்...

 

இந்திய அணியை மீண்டும் ஒரு முறை இறுதிப் போட்டி வியாதி துரத்தியது. பாகிஸ்தானில் இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது முறையாக ஆசியக்கோப்பையை இலங்கை அணி கைப்பற்றியது.

 

இன்று கராச்சியிலுள்ள நேஷனல் மைதானத்தில் ஆசியக்கோப்பைக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதின.

 

இந்திய அணியின் சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய பிரவீண் குமாருக்கு பதிலாக ராபின் உத்தப்பா சேர்க்கப்பட்டார்.

 

இலங்கை அணியில் தில்ஹாரா பெர்னாண்டோ, கவுசல்யா வீரரத்னே ஆகியோருக்கு பதிலாக சமிந்தா வாஸ், அஜந்தா மெண்டிஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.

 

பூவா தலையா வென்ற இந்திய அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி முதலில் எதிரணியை பேட்டிங் செய்யும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி சனத் ஜெயசூர்யாவும், குமார் சங்ககாராவும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர்.

 

இலங்கை அணிக்கு எடுத்த எடுப்பிலேயே இந்திய அணி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. 2-வது ஓவரில் இஷாந்த் சர்மா பந்தை அடித்த ஜெயசூர்யா ஒரு ரன்னுக்காக ஓடி வர முற்பட்டார். பின்னர் பின்வாங்கி விட்டார். அதற்குள் சங்ககாரா பாதி தூரம் ஓடி வர, சுரேஷ் ரெய்னா நேரடியாக பந்தை ஸ்டம்பை நோக்கி வீச, சங்ககாரா 4 ரன்களில் பரிதாபமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

 

இதற்கு பின் இஷாந்த் சர்மா விக்கெட் வேட்டை நடத்தினார். இவரது வேகத்தில் கேப்டன் மஹேல ஜெயவர்தனா 11 ரன்களிலும், கபுகேதரா 5 ரன்களிலும், சமரசில்வா ரன் ஏதும் எடுக்காமலும் வீழ்ந்தனர். இதையடுத்து 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்து இலங்கை திணறியது.

 

இவர்களுக்குப்பிறகு ஜெயசூர்யாயாவுடன், தில்ஷான் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்பாக ஆடி அணியை மீட்டனர். வழக்கம் போல் அதிரடி காட்டிய ஜெயசூர்யா, இர்பான் பதான் வீசிய 15.3 வது ஓவரில் பந்தை தூக்கி அடித்தார். இதை ஆர்.பி.சிங் சுலபமாக பிடித்திருக்கலாம். ஆனால் தவறாக கணித்த ஆர்.பி.சிங் அப்படியே படுத்து நழுவ விட்டார். அப்போது ஜெயசூர்யா 56 ரன்கள்தான் எடுத்து இருந்தார்.

 

இதற்கு தண்டனையாக ஆர்.பி.சிங் வீசிய 16வது ஓவரில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 26 ரன்கள் விளாசினார் ஜெயசூர்யா. ஒரு நாள் அரங்கில் 27வது சதம் கடந்த இவர் 114 பந்துகளில் 9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உள்பட 125 ரன்கள் எடுத்திருந்தபோது வீரேந்திர ஷேவாக் சுழலில் வீழ்ந்தார்.

 

மறுபக்கம் 14வது அரைசதம் கடந்த தில்ஷான் 56 ரன்களுக்கு பதான் பந்துவீச்சில் வெளியேறினார். இதையடுத்து இலங்கையின் ரன் வேகம் குறைந்தது. வாஸ் 19 ரன்களும், குலசேகரா 29 ரன்களும் எடுத்தனர். டெயிலெண்டர்கள் ஆர்.பி. சிங் வேகத்தில் விரைவாக நடையை கட்ட, இலங்கை அணி 49.5 ஓவரில் 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு வீரேந்திர ஷேவாக் அதிரடி துவக்கம் தந்தார். மறுபக்கம் கௌதம் காம்பிர் 6 ரன்கள் எடுத்திருந்தபோது சமிந்தா வாஸ் பந்துவீச்சில் வெளியேறினார். 26 பந்துகளில் அரைசதம் கடந்த வீரேந்திர ஷேவாக் 60 ரன்களுக்கு, அஜந்தா மெண்டிஸ் சுழலில் வீழ்ந்தார். இதே ஓவரில் யுவராஜ் சிங்கும் 0 ரன்களில் வெளியேற சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து மிரட்டிய மெண்டிஸ் சுழலில் சுரேஷ் ரெய்னா 16 ரன்களிலும், ரோஹித் சர்மா 3 ரன்களிலும் வெளியேறினர். முரளிதரன் பந்துவீச்சில் ராபின் உத்தப்பா 20 ரன்களிலும் நடையை கட்டினார். இப்படி முன் வரிசை ஆட்டக்காரர்கள் பொறுப்பற்ற முறையில் ஆட, இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

 

மீண்டும் பந்துவீச வந்த அஜந்தா மெண்டிஸ் 32வது ஓவரில் இர்பான் பதான், ஆர்.பி. சிங்கை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்தார். இதையடுத்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்பு அவருக்கு காத்திருந்தது. இந்த நேரத்தில் பிரக்யான் ஓஜா தடுத்து ஆட, வாய்ப்பு நழுவியது. தனி நபராக போராடிய கேப்டன் மஹேந்திரசிங் தோனி 49 ரன்களில் சமிந்தா வாஸ் வேகத்தில் வெளியேற, கோப்பை கனவு தகர்ந்தது. இந்திய அணி 39.3 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.

 

கடந்த 10 நாட்களாக பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை திருவிழா இன்றோடு முடிந்தது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல், பாதுகாப்பு காரணங்களுக்கு இடையே 13 போட்டிகள் நடைபெற்ற முடிந்தன. பரிசளிப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பங்கேற்றார். இறுதிப்போட்டியில் இந்திய அணியை தகர்த்த அஜந்தா மெண்டிஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரே ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.

 

@இப்போட்டியில் சுழல்ஜாலம் நிகழ்த்திய 23 வயதான அஜந்தா மெண்டிஸ் ஆசிய கோப்பை தொடரில் 6 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். ஆப்-பிரேக், லெக்- பிரேக், கூக்ளி என அனைத்து வகையான பந்து வீச்சையும் கலந்து வீசுவதில் இவர் வல்லவர். இதன்மூலம் பேட்ஸ்மேன்களை எளிதில் ஏமாற்றி விடுகிறார். நேற்று 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆசிய கோப்பையின் சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்தார்.

 

@11வது ரன் எடுத்த போது இலங்கை வீரர் சமிந்தா வாஸ் ஒரு நாள் போட்டிகளில் 2,000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.

 

@இந்திய அணிக்கு இறுதிப்போட்டி என்றாலே நடுக்கம் வந்துவிடுகிறது. கடைசியாக பங்கேற்ற மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட தொடர்களில் 22 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் 18 ல் தோல்வி அடைந்துள்ளது. 2 போட்டியில் கோப்பையை பகிர்ந்து கொண்டது. 2002-ல் நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடர், 2008-ல் நடைபெற்ற ஆஸ்திரேலிய முத்தரப்பு தொடர் ஆகிய இரண்டு தொடர்களில் மட்டுமே கோப்பை வென்றுள்ளது.

 

@ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆதிக்கத்தை இன்று இலங்கை அணி தகர்த்தது. நான்காவது முறையாக கோப்பை வென்ற இலங்கை, அதிக கோப்பை வென்ற அணிகள் வரிசையில் இந்தியாவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டது. பாகிஸ்தான் ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது.

 

நன்றி, வணக்கம்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2020 CricketArchive