CricketArchive

பாகிஸ்தானை வெல்லுமா இந்தியா?
by CricketArchive


Event:Asia Cup 2008

DateLine: 2nd July 2008

 

ஆசிய கோப்பை தொடரின் இன்றைய ‘சூப்பர்-4’ சுற்றுப் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இப்போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும்.

 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தா னில் நடக்கிறது. தகுதிச் சுற்றுப்போட்டிகள் முடிந்த நிலையில், கராச்சியில் இன்று நடக்கும் ‘சூப்பர்-4’ சுற்றின் 4-வது போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது.

 

சிறப்பான பார்மில் இருக்கும் இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் இறுதிப்போட்டிக்குள் எளிதில் நுழைந்துவிடும். பாகிஸ்தான் அணியோ இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

 

இத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான தகுதிச்சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சேவக் சதமடித்து அசத்தினார். அவருக்கு உறுதுணையாக கௌதம் காம்பீர் இருக்கிறார். இன்றும் இது தொடர்ந்தால் 350 ரன்களுக்கு மேல் சுலபமாக பெறலாம்.

 

நடுவரிசையில் சுரேஷ் ரெய்னா அதிரடி காட்டுகிறார். தகுதிச் சுற்றுப்போட்டியை போட்டியை தொடர்ந்து வங்கதேசத்திற்கு எதிரான ‘சூப்பர்-4’ சுற்றிலும் சதமடித்து மிரட்டினார். கடந்த மூன்று போட்டியில் 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 301 ரன்கள் சேர்த்திருப்பது கூடுதல் பலம்.

 

தோனி, யுவராஜ் இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர். ரோஹித் சர்மா, ராபின் உத்தப்பா இருவரும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். வலுவான இந்திய பேட்டிங் வரிசை அசத்தும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்படும்.

 

பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. பிரவீண்குமார், இஷாந்த் சர்மா, கோனி உள்ளிட்ட வேகங்கள் அதிகளவில் ரன்களை விட்டுக் கொடுக்கின்றனர். இதனால் வங்கதேச அணி கூட இந்தியாவுக்கு எதிராக வலுவான எண்ணிக்கையை எட்டியது. சுழலில் பியுஸ் சாவ்லா மிரட்டுகிறார். ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார். இன்றைய போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இத்தொடரில் இதுவரை நடந்த போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத இர்பான் பதான் தற்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். இவரது வருகையால் அணியின் பந்துவீச்சு எழுச்சி பெறும்.

 

பாகிஸ்தான் பேட்டிங் வரிசையில் சல்மான் பட் தொடர்ந்து ஏமாற்றம் தருகிறார். கடந்த மூன்று போட்டியில் இரண்டு முறை ரன் ஏதும் எடுக்காமலேயே வெளியேறினார். கேப்டன் சோயிப் மாலிக் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான தகுதிச் சுற்றுப் போட்டியில் சதமடித்து இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அதிர்ச்சி தந்தார். இலங்கை அணியுடன் மோதிய ‘சூப்பர்-4’ போட்டியில் அரைசதம் கடந்தார். நடுவரிசையில் யூனிஸ்கான், முகமது யூசுப், மிஸ்பா உல் ஹக் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி பேட்டிங்கில் அதிரடி காட்டினால் பாகிஸ்தான் அணி நல்ல எண்ணிக்கையை எட்டலாம்.

 

பாகிஸ்தான் பந்துவீச்சை பொறுத்தவரை உமர் குல் இல்லாத நிலையில் சோஹைல் தன்வீர் கலக்குகிறார். கடந்த மூன்று போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இப்திகார் அஞ்சும், வஹாப் ரியாஸ் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக பந்துவீசுகின்றனர்.

 

இலங்கை அணிக்கு எதிரான கடைசி ‘சூப்பர்-4’ சுற்றில் 2-வது போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் சோயிப் மாலிக்கின் உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால் இந்தியாவுக்கு எதிரான இன்றைய முக்கிய போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இது குறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் லாசன் கூறுகையில்,“ கேப்டன் மாலிக் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஓட்டலில் இருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இவர் நேற்று நடந்த பயிற்சியில் பங்கேற்கவில்லை. இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்பதால் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம்,” என்றார்.

 

இதற்கிடையே உள்நாட்டு தொடரிலேயே சர்ச்சைகளில் மூழ்கியுள்ள பாகிஸ்தான், தோல்விகளில் இருந்து எப்படி மீண்டெழுப்போகிறது எனத் தெரியவில்லை. அணிப் பயிற்சியாளர் ஜெப் லாசன், மூத்த வீரர்களுடன் மோதல் கொண்டுள்ளார். போதாக்குறைக்கு, செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களின் கோபத்துக்கும் ஆளாகியுள்ளார். அவரது தலைக்கனமான பேச்சால் பத்திரிகையாளர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அதற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

 

இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதால் போட்டியின் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

 

தற்போதைய ஆசிய கோப்பை தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய அணி, ஹாங்காங் அணிக்கு எதிரான 374 ரன்கள் பதிவு செய்தது. இதுவே ஆசிய கோப்பை வரலாற்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.

 

ஒரு நாள் அரங்கில் இதுவரை இந்திய, பாகிஸ்தான் அணிகள் 118 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 67 போட்டிகளிலும், இந்தியா 45 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 5 போட்டிகள் கைவிடப்பட்டது.

 

போட்டி நடைபெற உள்ள இந்த மைதானத்தில் இதுவரை 40 முறை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியா விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 தோல்வி, 1 போட்டி கைவிடப்பட்டது. பாகிஸ்தான் அணி 35 போட்டிகளில் விளையாடி 17 போட்டிகளில் வெற்றியையும், 16 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

 

இம்மைதானத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் 7 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளது. அதில் இந்தியா 5 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் பெற்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டது.

 

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர் மஹேந்திர சிங் தோனி அதிகபட்ச ரன்கள் எடுத்தவர் ஆவார். இவர் 2004/2005-ல், விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 148 ரன்கள் குவித்தார்.

 

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வீரர் சயித் அன்வர், 1996/1997-ல், சென்னையில் நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக 194 ரன்கள் குவித்தார்.

 

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர் சௌவுரவ் கங்குலி 1997-ல், டொரான்டோவில் நடைபெற்ற போட்டியில் 16 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும்.

 

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வீரர் அக்யிப் ஜாவித் 1991/1992-ல், சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் 37 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும்.

 

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டியில், இந்திய அணி அதிகபட்சமாக 356 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி 344 ரன்கள் எடுத்தது.

 

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி குறைந்த பட்சமாக 79 ரன்கள் எடுத்தது. இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி 87 ரன்கள் எடுத்தது.

 

நன்றி, வணக்கம்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive