CricketArchive

ராஜஸ்தானை சாய்த்தது பஞ்சாப் அணி
by CricketArchive


Scorecard:Kings XI Punjab v Rajasthan Royals
Player:SE Marsh
Event:Indian Premier League 2007/08

DateLine: 29th May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (இரவுப் போட்டி), 56-வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்: பஞ்சாப் கிரிக்கெட் மைதானம், மொஹாலி.
தேதி: 28.05.2008. வெள்ளிக் கிழமை.
மோதிய அணிகள: பஞ்சாப் அணி - ராஜஸ்தான் அணி
முடிவு: 41 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி
ஆட்ட நாயகன்: ஷான் மார்ஷ்

 

வணக்கம்

 

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டியின் 56-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு மொஹாலியிலுள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. இத்தொடரின் கடைசி தகுதிச் சுற்று ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறி விட்டதால், இப்போட்டி முக்கியத்துவம் பெறவில்லை. அதனால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஷேன் வார்னே, கிரேம் ஸ்மித், சோஹைல் தன்வீர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள, ராஜஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை ஷேன் வாட்சன் ஏற்றார்.

 

பூவா தலையா வென்ற வென்ற ஷேன் வாட்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 

ஷான் மார்ஷும், ஜேம்ஸ் ஹோப்ஸும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி பஞ்சாப் அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

 

இவர்கள் இருவரும் தாங்கள் சந்திக்கும் பந்துகளை நாலாபுறமும் விளாசித் தள்ள...ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

 

பங்கஜ் சிங் வீசிய 7வது ஓவரில் மார்ஷ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். திரிவேதி வீசிய 11வது ஓவரில் ஹோப்ஸ் ஹாட்ரிக் பவுண்டரிகள் விளாசினார்.

 

அபாரமாக விளையாடி வந்த ஹோப்ஸ் 35 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உள்பட 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 82 பந்துகளில் 133 ரன்கள் குவித்தது.

 

இவரையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ் சிங்கும் தன் பங்கிற்கு வாண வேடிக்கை காட்ட, மறுமுனையில் அதிரடியை அப்படியே தொடர்ந்த ஷான் மார்ஷ் 58 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் உள்பட 100 ரன்கள் குவித்து இத்தொடரில் தனது முதல் சதத்தைக் கடந்தார்.

 

திரிவேதி வீசிய 18வது ஓவரில் யுவராஜ்சிங் ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்த ஷான் மார்ஷ் 69 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் உள்பட 115 ரன்கள் எடுத்திருந்தபோது ஷேன் வாட்சன் பந்துவீச்சில் யூனிஸ்கானிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

சொந்த மண்ணில் எதிரணியைத் திணறடித்த ஷான் மார்ஷ் ஆட்டமிழந்து திரும்பும் போது உள்ளூர் ரசிகர்கள் ஆராவாரம் செய்து அவரை பாராட்டினர். அவர்களோடு அந்த அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவும் சேர்ந்து கொண்டு, சத்தமிட்டும், பஞ்சாப் அணியின் கொடியை அசைத்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

வாணவேடிக்கை காட்டிய யுவராஜ்சிங் 16 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 49 ரன்கள் எடுத்திருந்த போது ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்து அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

 

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.

 

எட்ட முடியாத இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி எடுத்த எடுப்பிலேயே தடுமாறியது. ஸ்மித் இல்லாத நிலையில் துவக்க வீரராக வந்த முகமது கைப் வந்த வேகத்திலேயே 1 ரன் எடுத்த திருப்தியில் ஸ்டம்புகளை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த யூனிஸ் கானும் 3 ரன்களுக்கு நடையை கட்டினார்.

 

மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நீரஜ் படேல் அசத்தலாக விளையாடினார். இவருக்கு அந்த அணியின் தற்காலிக கேப்டன் ஷேன் வாட்சன் ஒத்துழைப்பு தந்தார்.

 

ஸ்ரீசாந்த் வீசிய நான்காவது ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசினார் நீரஜ் படேல். ஆனால் அவர் 57 ரன்கள் எடுத்திருந்தபோது பியுஸ் சாவ்லா சுழலில் ஆட்டமிழந்தார்.

யுவராஜ் வீசிய 12வது ஓவரில் வாட்சன் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடிக்க...ஒட்டுமொத்தமாக 20 ரன்கள் கிடைத்தது. ஷேன் வாட்சன் 22 ரன்கள் எடுத்திருந்த போது சாவ்லா சழலில் ஆட்டமிழந்தார்.

 

ஸ்ரீசாந்த் வீசிய 14வது ஓவரில் வெளுத்து வாங்கினார் கம்ரான் அக்மல். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஹாட்ரிக் சிக்சர் அடித்து அசத்தினார். ஆனால் அவரது அதிரடி ஆட்டம் பியூஷ் சாவ்லாவிடம் பலிக்கவில்லை. அவரும் சாவ்லா சுழலில் வீழ்ந்தார். அவர் 8 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட 24 ரன்கள் எடுத்தார்.

 

கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய யூசுப் பதான் 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரவாத் 23 ரன்களுடனும், பங்கஜ் சிங் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

 

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் மட்டும் எடுத்து, 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 

பஞ்சாப் அணி சார்பில் பியூஷ் சாவ்லா 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஹோப்ஸ் 2 விக்கெட்டுகளையும், இர்பான் பதான், ஸ்ரீசாந்த் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

அதிரடியாக சதம் கடந்த ஷான் மார்ஷ், இப்போட்டித் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியிலில் முதலிடம் பெற்றார். இவர் 10 போட்டிகளில் 593 ரன்கள் எடுத்துள்ளார். இவரே இப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

 

இரண்டு போட்டிகளில் மட்டும் தோல்வியுற்று, அதன் பிறகு நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டங்களில் வெற்றிநடை போட்டுவந்த ராஜஸ்தான் அணிக்கு இந்த போட்டியில், அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்தது பஞ்சாப் அணி.

 

நன்றி, வணக்கம்.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2021 CricketArchive