CricketArchive

இந்தியாவை வீழ்த்துமா பாகிஸ்தான்?
by CricketArchive


Ground:Shere Bangla National Stadium, Mirpur
Scorecard:India v Pakistan
Event:Kitply Cup 2008

DateLine: 14th June 2008

 

வணக்கம்

 

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று பரம எதிரிகளான இந்திய, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

 

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தின் மிர்பூரில் நடக்கிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி, வங்கதேசத்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. இந்திய அணி, பாகிஸ்தான், வங்கதேச அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி, புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

 

இன்று மிர்பூரில் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது.

 

சேவக்-காம்பிர் ஜோடி, இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் தந்து அசத்துகின்றனர். தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இவர்களின் வலுவான துவக்கத்தால் எதிரணியின் பந்துவீச்சாளர்கள் மிரண்டு போயினர். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் காம்பிர் சதமடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

 

இன்றைய போட்டியிலும் இவர்களது அதிரடி ஆட்டம் தொடர்ந்தால் இமாலய இலக்கை இந்திய அணி எட்டும். ‘மிடில்-ஆர்டரில்’ வலு சேர்க்க ரோஹித் சர்மா, ரெய்னா, தோனி, யுவராஜ் என மிகப்பெரிய படை இருக்கிறது. அறிமுக வீரராக களமிறங்கிய யூசுப் பதான் முதல் போட்டியில் சொதப்பினாலும், எப்போது வேண்டுமானாலும் எழுச்சி பெறலாம் என்பதால் பேட்டிங் வரிசையில் இவர் கூடுதல் பலம் சேர்க்கிறார்.

 

பந்துவீச்சைப் பொறுத்தவரை அணியின் மிகப்பெரிய பலமாயிருப்பது பிரவீண் குமார். எதிரணியின் துவக்க வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இவர் இன்றைய போட்டியிலும் ஜொலிக்கும் பட்சத்தில் எளிதில் வெற்றி பெறலாம். இஷாந்த் சர்மா, இர்பான் பதான், ஆர்.பி. சிங் பந்துவீச்சில் கூடுதல் பலம் சேர்க்கின்றனர். சுழலில் யூசுப் பதான், பியுஸ் சாவ்லா கைகொடுத்தால் எதிரணியின் ரன்வேட்டையை கட்டுப்படுத்தி, விக்கெட் வேட்டை நிகழ்த்தலாம்.

 

ஒரு நாள் அரங்கில் தொடர்ந்து 12 வெற்றிகள் பெற்ற பாகிஸ்தானின் வெற்றிநடைக்கு தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்தது. இன்றும் அசுர பலத்துடன் இந்தியா களமிறங்குவதால் பாகிஸ்தான் தப்புவது மிகவும் கடினம்.

 

பாகிஸ்தான் அணியிலும் சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். துவக்க வீரர்களாக களமிறங்கும் சல்மான் பட், அக்மல் ஜோடி அதிரடி காட்டும் பட்சத்தில் வலுவான ஸ்கோரை பாகிஸ்தான் பெறலாம். ‘மிடில்-ஆர்டரில்’ முகமது யூசுப், மிஸ்பா பலம் சேர்க்கின்றனர் . இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கேப்டன் மாலிக் அரைசதம் கடந்து எழுச்சி கண்டது, கூடுதல் வலு சேர்க்கிறது. அப்ரிதி ‘ஆல்-ரவுண்டராக’ அசத்துவது இந்திய அணிக்கு ஆபத்து.

 

அக்தர், ஆசிப் இல்லாமல் பாகிஸ்தானின் பந்துவீச்சு பரிதாபமாக இருக்கிறது. வகாப் ரியாஸ் ‘ரன் வள்ளலாக’ இருக்கிறார். உமர் குல், சோகைல் தன்வீர் மட்டுமே நம்பிக்கை தருகின்றனர். சுழலில் அனுபவ அப்ரிதி உள்ளார்.

 

தகுதிச் சுற்றுப் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் காத்திருக்கிறது. மறுபக்கம் கோப்பையை கைப்பற்றும் உற்சாகத்தில் தோனியின் படை மிகவும் வலுவாக இருப்பதால், ரசிகர்கள் இன்னொரு‘விறுவிறு’ மோதலை எதிர்பார்க்கலாம்.

 

ஒரு நாள் அரங்கில் இதுவரை இந்திய,பாகிஸ்தான் அணிகள் 114 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 66 போட்டிகளிலும், இந்தியா 44 போட்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை.

 

வங்க தேசத்தில் பாகிஸ்தானை எதிர்த்து இந்திய அணி 7 முறை விளையாடி, அதில் 5 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

 

போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் இதுவரை 13 முறை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியா விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி 1 வெற்றி, 1 தோல்வியைப் பெற்றுள்ளது.

 

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர் மஹேந்திர சிங் தோனி அதிகபட்ச ரன்கள் எடுத்தவர் ஆவார். இவர் 2004/2005-ல், விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 148 ரன்கள் குவித்தார்.

 

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வீரர் சயித் அன்வர், 1996/1997-ல், சென்னையில் நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக 194 ரன்கள் குவித்தார்.

 

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர் சௌவுரவ் கங்குலி 1997-ல், டொரான்டோவில் நடைபெற்ற போட்டியில் 16 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும்.

 

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வீரர் அக்யிப் ஜாவித் 1991/1992-ல், சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் 37 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும்.

 

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டியில், இந்திய அணி அதிகபட்சமாக 356 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி 344 ரன்கள் எடுத்தது.

 

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி குறைந்த பட்சமாக 79 ரன்கள் எடுத்தது. இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி 87 ரன்கள் எடுத்தது.

 

இலங்கையைச் சேர்ந்த அசோக டிசில்வாவும், நாதிர் ஷாவும் களநடுவர்களாக செயல்படுவார்கள். ஏ.எப்.எம். அக்தாருதீன் மூன்றாவது நடுவராக செயல்படுவார். நியூசிலாந்தின் ஜெப் குரோவ் போட்டியின் நடுவராக செயல் படுகிறார்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive