| Scorecard: | Sri Lanka v India |
| Event: | India in Sri Lanka 2008 |
DateLine: 25th July 2008
வணக்கம்.
 
கொழும்புவில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலன், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக ஆடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 600 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதல் கட்டமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 
இந்த அரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது கொழும்புவில் நடைபெற்று வருகிறது. 
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 422 ரன்கள் எடுத்திருந்தது. திலன் சமரவீரா 111 ரன்களுடனும், திலகரத்னே தில்ஷான் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 
அதைத் தொடர்ந்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடர்ந்தது. 
சிறப்பாக ஆடி வந்த சமரவீரா 127 ரன்கள் எடுத்திருந்தபோது ஜாகீர்கான் பந்து வி.வி.எஸ்.லட்சுமணிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடைய எண்ணிக்கையில் 18 பவுண்டரிகள் அடங்கும். 
இவரையடுத்து திலகரத்னே தில்ஷானுடன் பிரசன்ன ஜெயவர்தனே ஜோடி சேர்ந்தார். தில்ஷானும் தன்பங்கிற்கு இந்திய பந்துவீச்சாளர்களை நோகடித்தார். இந்திய பந்துவீச்சுகளை நாலாபுறமும் சிதறடித்த தில்ஷான் 145 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகள் உள்பட தனது 4-வது சதத்தைக் (இந்தியாவிற்கு எதிராக முதல் சதம்) கடந்தார். 
இவருக்கு மிகப் பொறுமையாக ஒத்துழைப்பு தந்த பிரசன்ன ஜெயவர்தனே 70 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன்சிங் பந்து இஷாந்த் சர்மாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். 
இவரையடுத்து சமிந்தா வாஸ் தில்ஷானுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சற்று அதிரடிகாட்டி ஆடினர். இலங்கை அணி 162 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 600 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக மஹேல ஜெயவர்தனே அறிவித்தார். 
தில்ஷான் 125 ரன்களுடனும், வாஸ் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா, ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 
இதையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக வீரேந்திர ஷேவாக்கும், கௌதம் காம்பீரும் களமிறங்கினர். ஷேவாக் வழக்கம் போல் அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்பட 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
இதையடுத்து கௌதம் காம்பீருடன் ராகுல் திராவிட் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக ஆடினர். கௌதம் காம்பீர் 37 ரன்கள் எடுத்திருந்தபோது முரளிதரன் சுழலில் வீழ்ந்தார். இவரையடுத்து ராகுல் திராவிட் 14 ரன்கள் எடுத்திருந்தபோது அஜந்தா மெண்டிஸ் சுழலில் வீழ்ந்தார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் இவர் வீழ்த்தும் முதல் விக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. 
இதையடுத்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் தெண்டுல்கர் 27 ரன்களில் முரளிதரன் சுழலில் வீழ்ந்து இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். 
இவர்களையடுத்து சௌவுரவு கங்குலியும், வி.வி.எஸ்.லட்சுமணும் ஜோடி சேர்ந்தனர். கங்குலி 8 ரன்கள் எடுத்திருந்த போது அஜந்தா மெண்டிஸ் பந்தை தனது காலில் வாங்கினார். இலங்கை வீரர்கள் எல்.பி.டபிள்யூ முறையில் கங்குலி ஆட்டமிழந்ததாக அறிவிக்கும்படி களநடுவரிடம் முறையிட்டனர். அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து இலங்கை அணியின் கேப்டன் மஹேல ஜெயவர்தனே களநடுவரின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென முறையிட்டார். 
இதை ஆய்வு செய்த மூன்றாவது நடுவரும் களநடுவர் கொடுத்த தீர்ப்பு சரியென மறுதீர்ப்பளித்தார். இலங்கை தரப்பில் இருந்த மூன்று வாய்ப்புகளில் ஒரு வாய்ப்பு வீணானது. 
சௌவுரவ் கங்குலி 23 ரன்கள் எடுத்திருந்தபோது முரளிதரன் சுழலில் நுவன் குலசேகராவிடம் பிடி கொடுத்து வெளியேறினார். 
இப்படி முன்வரிசை ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து வீழ, இந்திய அணி 138 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 
இவரையடுத்து லட்சுமணுடன், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இவரும் தான் வந்த வேகத்தில் 9 ரன்கள் எடுத்து முரளிதரன் சுழலில் அவரிடமே பிடி கொடுத்து வெளியேறினார். 
நீண்ட இடைவெளிக்குப்பிறகு அணியில் இடம்பிடித்த வீரர்கள் யாரும், தங்களுக்கு அளித்த வாய்ப்புகளை பயன்படுத்தத் தவறிவிட்டனர். 
இவரையடுத்து லட்சுமணுடன், இந்திய அணியின் கேப்டன் அனில் கும்ப்ளே ஜோடி சேர்ந்தார். 
லட்சுமண் 19 ரன்களும், கும்ப்ளே 1ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். போதிய வெளிச்சமின்மை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் சற்று முன்னதாகவே நிறுத்தப்பட்டது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 441 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 
இப்படி விக்கெட்டுகள் சட்டென்று வீழ்ந்தால் பாலோ ஆன் ஆவதைத் தவிர வேறு வழியில்லை. 
இலங்கை அணி தரப்பில் முரளிதரன் 4 விக்கெட்டுகளையும், நுவன் குலசேகரா, அஜந்தா மெண்டிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். 
இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதம் உள்ளது. 
நன்றி, வணக்கம்LATEST SCORES
CURRENT EVENTS
- Australia in Pakistan 2025/26
- Denmark Women in Oman 2025/26
- England in Sri Lanka 2025/26
- ICC Men's T20 World Cup 2025/26
- ICC Women's T20 World Cup Qualifier 2025/26
- Ireland and Italy in United Arab Emirates 2025/26
- Ireland in United Arab Emirates 2025/26
- Lotus Cup Women's International Tri-Series 2025/26
- New Zealand in India 2025/26
- Pakistan Women in South Africa 2025/26
- West Indies in South Africa 2025/26
View all Current Events CLICK HERE


