CricketArchive

கங்குலியின் அதிரடியால் கொல்கத்தா வெற்றி
by CricketArchive


Scorecard:Kolkata Knight Riders v Kings XI Punjab
Player:Umar Gul
Event:Indian Premier League 2007/08

DateLine: 25th May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (இரவு ஆட்டம்), 52-வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்: ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா.
தேதி: 25.05.2008. ஞாயிற்றுக் கிழமை.
மோதிய அணிகள்: பஞ்சாப் அணி - கொல்கத்தா அணி
முடிவு: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி
ஆட்ட நாயகன்: உமர் குல்

 

வணக்கம்

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டித் தொடரின் 52-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடிய கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அரையிறுதி வாய்ப்பை இழந்த கொல்கத்தா அணி தனது கடைசி தகுதிச்சுற்று போட்டியில் ஆறுதல் வெற்றி தேடி களமிறங்கியது. ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய உற்சாகத்தில் பஞ்சாப் அணி களம் புகுந்தது. முக்கியத்துவம் இல்லாத இப்போட்டியில் பூவா தலையா வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ்சிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கடந்த போட்டியில் விளையாடிய பஞ்சாப் அணி வீரர்களான லூக் பொமர்ஸ்பேச், ககன்தீப்சிங் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஜேம்ஸ் ஹோப்ஸ், இர்பான் பதான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

அதே போல கடந்த போட்டியில் விளையாடிய கொல்கத்தா அணி வீரர்களான முகமது ஹபீஸ், அஜித் அகார்கர் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆகாஷ் சோப்ரா, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக பஞ்சாப் அணி சார்பில் ஷான் மார்ஷும் ஜேம்ஸ் ஹோப்ஸும் களமிறங்கினர். கொல்கத்தா அணி வீரர் உமர் குல் ஆரம்பம் முதலே மிகத்துல்லியமாக பந்துவீசி மிரட்டினார். இவரது வேகத்தில் ஜேம்ஸ் ஹோப்ஸ் 13 ரன்கள் எடுத்திருந்த போது வீழ்ந்தார்.

இவரையடுத்து ஷான் மார்ஷுடன் சங்ககாரா ஜோடி சேர்ந்தார். இவர்களிருவரும் எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து பவுண்டரி, சிக்சர் மழை பொழிந்து அசத்தினர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஷான் மார்ஷ் 31 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரை அஜந்தா மென்டிஸ் வெளியேற்றினார்.

இவரையடுத்து சங்ககாராவுடன் பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ்சிங் ஜோடி சேர்ந்தார். அரைசதம் கடந்த சங்ககாரா 45 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 64 ரன்கள் எடுத்திருந்தபோது உமர் குல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ்சிங் 27 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இர்பான் பதான், பியூஷ் சாவ்லா ஆகியோர் உமர்குல் பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஜெயவர்தனே 11 ரன்களுடனும், ஸ்ரீவாத்சவா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ஆட்டநேர முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா அணி சார்பில் புயல் வேகத்தில் பந்துவீசிய உமர் குல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 4 ஓவர்களில் 49 ரன்களை வாரி வழங்கினார் இஷாந்த் சர்மா.

கடின இலக்கை விரட்டிய கொல்கத்தா அணிக்கு அந்த அணியின் கேப்டன் கங்குலி அதிரடி துவக்கம் தந்தார். இர்பான் பதான் வீசிய முதல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்தார். மறுபக்கம் சல்மான் பட் பவுண்டரிகளாக விளாச... அணியின் எண்ணிக்கை மிக விரைவாக உயர்ந்தது.

ரமேஷ் பொவார் சுழலில் கங்குலி ஒரு சூப்பர் சிக்சர் அடித்து அசத்தினார். இந்த நேரத்தில் 6வது ஓவரை வீசிய ஸ்ரீசாந்த் தொடர்ச்சியாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பரபரப்பு ஏற்படுத்தினார். இரண்டாவது பந்தில் சல்மான் பட்டை வெளியேற்றினார். அவர் 24 ரன்கள் எடுத்திருந்தார். மூன்றாவது பந்தில் டி.பி. தாசை அவுட்டாக்கினார். அடுத்து வந்த டேவிட் ஹசி ஒரு ரன் எடுக்க, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு நழுவியது.

டேவிட் ஹசி 12 ரன்கள் எடுத்திருந்தபோது பியூஷ் சாவ்லா சுழலில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து வந்த லக்ஷ்மி சுக்லா 5 ரன்களும், விரித்தமன் சாஹா 13 ரன்களும், ஆகாஷ் சோப்ரா 2 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேற 15.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி தத்தளித்தது. இன்னும் 27 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை.

இதற்கு பின் கங்குலியும், உமர் குல்லும் இணைந்து பஞ்சாப் அணியை மிரட்டினர். ஹோப்ஸ் வீசிய 16வது ஓவரில் உமர்குல் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாசினார்.

‘கேப்டன் இன்னிங்ஸ்’ விளையாடிய கங்குலி, பியூஷ் சாவ்லா வீசிய 17வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க... மொத்தமாக அந்த ஓவரில் 18 ரன்கள் கிடைத்தது. ஸ்ரீசாந்த் வீசிய 18வது ஓவரில் உமர் குல் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து அசத்தினார்.

எதிரணியின் பந்துவீச்சை வாணவேடிக்கை காட்டிய உமர் குல் 11 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இர்பான் பதான் மிகுந்த பதட்டத்துடன் பந்துவீசினார்.

முதல் பந்தை கங்குலி சிக்சருக்கு அனுப்ப... ஈடன் கார்டன் மைதானம் அதிர்ந்தது. இரண் டாவது பந்தில் 2 ரன் கிடைத்தது. 3வது பந்தில் கங்குலி இன்னொரு சிக்சர் அடிக்க...உள்ளூர் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். இவர் நான்காவது பந்தில் ஒரு ரன் எடுக்க...கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.

இப்போட்டித் தொடரில் 3வது அரைசதம் கடந்த கங்குலி 53 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 86 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பஞ்சாப் அணி சார்பில் ஸ்ரீசாந்த், வி.ஆர்.வி.சிங், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஹோப்ஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அசத்திய கொல்கத்தா அணியின் உமர் குல் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive