Scorecard: | Deccan Chargers v Royal Challengers Bangalore |
Player: | R Vinay Kumar |
Event: | Indian Premier League 2007/08 |
DateLine: 25th May 2008
போட்டி: 20 ஓவர்கள் போட்டி (பகலிரவுப் போட்டி), 51-வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்: ராஜிவ்காந்தி சர்வதேச மைதானம். ஹைதராபாத்.
தேதி: 25.05.2008. ஞாயிற்றுக் கிழமை.
மோதிய அணிகள்: டெக்கான் அணி - பெங்களூர் அணி
முடிவு: 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி
ஆட்ட நாயகன்: வினய் குமார்
 
வணக்கம்20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டித் தொடரின் 51-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று மாலை ஹைதராபாத்திலுள்ள ராஜிவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.
டிராவிட் தலைமையிலான பெங்களூர் அணியும், வி.வி.எஸ். லட்சுமண் தலைமையிலான டெக்கான் அணியும் இப்போட்டித் தொடரில் படுமோசமாக விளையாடின. இதனால் இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை பரிதாபமாக இழந்தன. தரவரிசைப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள இந்த இரு அணிகளும் ஏழாவது இடத்தைப் பிடிப்பதற்காக இன்று மோதின. முக்கியத்துவம் இல்லாத போட்டி என்பதால் மைதானத்தின் பல பகுதிகள் ஆளின்றி வெறிச்சோடிக் கிடந்தன. டெக்கான் அணியில் ஸ்காட் ஸ்டைரிஸ், பிரக்யான் ஓஜாவுக்குப் பதிலாக சமிந்தா வாஸ், அர்ஜுன் யாதவ் இருவரும் சேர்க்கப்பட்டிருந்தனர். பெங்களூர் அணியில் மார்க் பவுச்சர், பிரவீண் குமார் ஆகியோருக்குப் பதிலாக கேமரான் ஒயிட், வாசிம் ஜாபர் இருவரும் இடம் பெற்றிருந்தனர். பூவா தலையா வென்ற டெக்கான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. டெக்கான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆடம் கில்கிறிஸ்டும், ஹெர்சல் கிப்சும் நிதானமாக விளையாடினர். முதல் ஆறு ஓவர்களில் 41 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 7வது ஓவரை வீசிய ஜாக் காலிசுக்கு காயம் ஏற்பட்டதால், அந்த ஓவரை விராட் கோஹ்லி தொடர்ந்தார். 8வது ஓவரில் அதிரடிக்கு மாறிய கிப்ஸ் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்தார். அகில் வீசிய 11வது ஓவரில் இரண்டு சிக்சர்கள், இரண்டு பவுண்டரிகள் விளாசி கில்கிறிஸ்டும் தனது அதிரடியை துவக்கினார். 
கும்ளே சுழலில் கிப்ஸ் 47 ரன்களுக்கு வெளியேறினார். அதில் 2 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். இவரை பின்பற்றி கில்கிறிஸ்டும் வினய் குமார் வீசிய 13வது ஓவரில் அகிலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 37 பந்துகளில் 2 சிக்சர்கஸ்ரீஃ, 6 பவுண்டரிகள் உள்பட 46 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா 17 ரன்கள் எடுத்திருந்த போது வினய் குமார் பந்து வீச்சில் டேல் ஸ்டெயினிடம் பிடி கொடுத்து வெளியேறினார். வேணுகோபால் ராவ், கும்ளே வீசிய 17வது ஓவரில் இரண்டு சிக்சர்கள், ஒரு பவுண்டரி விளாசி மிரட்டினார். விராட் கோஹ்லி வீசிய அடுத்த ஓவரில் ரவி தேஜா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய வேணுகோபால் ராவ் 12 பந்துகளில் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 26 ரன்கள் எடுத்திருந்தபோது வினய் குமார் பந்துவீச்சில் வாசிம் ஜாபரிடம் பிடி கொடுத்து வெளியேறினார். அடுத்த பந்திலேயே சஞ்சய் பங்கர் ரன் அவுட்டானார். கடைசி ஓவரை சிறப்பாக வீசிய ஸ்டெயின் ஒரு ரன் மட்டுமே கொடுத்து அர்ஜுன் யாதவ், ஆர்.பி.சிங் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். கில்கிறிஸ்ட், கிப்ஸ், வேணுகோபால் ராவ், ரோஹித் சர்மா ஆகியோரைத்தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்களிலேயே ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் டெக்கான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணி சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டுகளையும், டேல் ஸ்டெயின், விராட் கோஹ்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கும்ப்ளே 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதையடுத்து 20 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு, பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஜாக் காலிசும், வாசிம் ஜாபரும் களமிறங்கினர். வாசிம் ஜாபர் 5 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து ஜாக் காலிசுடன் மிஸ்பா உல் ஹக் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய ஜாக் காலிசும் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து மிஸ்பா உல் ஹக்குடன், பெங்களூர் அணியின் கேப்டன் ராகுல் திராவிட் ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த மிஸ்பா உல் ஹக், வேணுகோபால் வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரிகளை விளாசி அதிரடிக்கு மாறினார். ஆனால் அடுத்த ஓவரிலேயே ரவி தேஜாவின் பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்டு சமரசில்வாவிடம் பிடி கொடுத்து வெளியேறினார். அவர் 28 பந்துகளில் 1 சிக்சர், 4 பவுண்டரிகள் உள்பட 34 ரன்கள் எடுத்தார். கேப்டன் டிராவிட்டும், கேமரான் ஒயிட்டும் சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தும் பணியில் இறங்கினர். 14 வது ஓவரில் ஆளுக்கு ஒரு சிக்சர் அடித்து மிரட்டினர். சஞசய் பாங்கர் வீசிய 16 வது ஓவரில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை அடித்த டிராவிட், அடுத்த பந்தில் கில்கிறிஸ்டிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 1 சிக்சர், 3 பவுண்டரிகள் உள்பட 31 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த விராட் கோஹ்லி 9 ரன்கள் எடுத்திருந்தபோது சமிந்தா வாஸ் பந்துவீச்சில் தேஜாவிடம் பிடி கொடுத்து வெளியறினார். சமரசில்வா வீசிய 19வது ஓவரில் பாலச்சந்திர அகில் மூன்று சிக்சர்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார். முடிவில் பெங்களூர் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட் வீழ்த்திய பெங்களூர் அணியின் வினய் குமார் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி தரவரிசைப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது. டெக்கான் அணி தோல்வி அடைந்ததால் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த இரு அணிகளுக்கும், தலா 1 தகுதிச்சுற்று ஆட்டம் இன்னும் மீதம் உள்ளது. நன்றி, வணக்கம்.