CricketArchive

கேமரான் வொயிட்
by CricketArchive


Player:CL White

DateLine: 6th September 2008

 

முழுப்பெயர்: கேமரான் லியான் வொயிட்

 

பிறப்பு: 18 ஆகஸ்டு 1983, பைர்ன்ஸ்டேல், விக்டோரியா, ஆஸ்திரேலியா.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: வலகை சுழற்ப்பந்து வீச்சாளர்

 

அணியில் வீரரின் நிலை: ஆல்ரவுண்டர்

 

விளையாடிய அணிகள்: ஆஸ்திரேலியா, விக்டோரியா, சோமர்செட், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: இன்னும் அறிமுகமாகவில்லை
ஒருதினப் போட்டி: அக்டோபர் 5, 2005 அன்று ஆஸ்திரேலியா - சர்வதேச லெவன் இடையே மெல்போர்னில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஜனவரி 13, 2005 அன்று ஆஸ்திரேலியா - பாகிஸ்தானிஸ் இடையே அடிலெய்டில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

ஆஸ்திரேலிய அணியின் புதிய ஆல்ரவுண்டர். இவரிடம் நிறைய திறமைகள் இருந்தும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பதற்கு நீண்ட நாட்கள் காத்திருந்தவர். திறமை வாய்ந்த ஆட்டக்காரர், சுழற்பந்துவீச்சாளர், பீல்டர்.

 

2003-04 காலகட்டத்தில் விக்டோரியா அணியின் கேப்டனாக விளையாடினார். அப்போது அவருக்கு வயது இருபது. அந்த அணியின் வரலாற்றில் மிக இளம் வயதில் கேப்டன் பொறுப்பை ஏற்றவர் கேமரான் வொயிட் என்ற சாதனையை பதிவு செய்தார். அதற்கு அவரது சிறப்பான ஆட்டத்திறமையும், அணியை வழி நடத்திச் செல்லும் பண்பும்தான் காரணம்.

 

2005-ல் சர்வதேச அணிக்கெதிரான ஒருதினத் தொடரில் தனது அறிமுகத்தை ஆரம்பித்தார். இதனையடுத்து நடைபெற்ற ஜிம்பாப்வேவிற்கு எதிரான தொடரில் ஸ்டூவர்ட் மெக்கில் சில காரணங்களுக்காக அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கேமரான் வொயிட் சேர்க்கப்பட்டார்.

 

இதன்பிறகு இங்கிலாந்திலுள்ள கவுண்டி அணியான சோமர்செட் அணிக்காக விளையாடினார். 2006-ல், இவரது அணிக்கும், க்ளோசெஸ்டர்ஷையர் அணிக்கும் இடையே நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் வாணவேடிக்கை காட்டி 44 பந்துகளில் சதமடித்தார். 20ஓவர் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

 

2006-07 ல் நடைபெற்ற காமன்வெல்த் வங்கிக்கான முத்தரப்பு ஒருதினத் தொடரில் இடம்பிடித்து விளையாடினார். இத்தொடரின் போது நியுசிலாந்திற்கெதிரான போட்டியில் 32 பந்துகளில் அதிரடியாக ஆடி 45 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறக் காரணமாகவும் இருந்தார்.

 

இதன்பிறகு 2007-ல் நடைபெற்ற சாப்பல்-ஹாட்லி தொடரில் இதே இரண்டு அணிகளும் ஆக்லாந்தில் மோதிய போட்டியில் 19 பந்துகளில் 42 ரன்கள் குவித்து அசத்தினார். இப்படி சிறப்பாக திறமையை வெளிக்காட்டியிருந்தும் 2007 உலகக்கோப்பை அணியில் இவரால் இடம்பெறமுடியவில்லை.

 

2007-08,ல் புரா கோப்பைத் தொடரில், விக்டோரியா அணியின் கேப்டனாக பொறுப்பேற்று 9 போட்டிகளில் விளையாடி 1 சதம், 5 அரைசதங்கள் உள்பட 748 ரன்கள் குவித்தார். அதுமட்டுமின்றி 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இவரது அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார்.

 

இதே ஆண்டில், மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்த ஒரு தின அணியில் விளையாடினார்.

 

தற்போது வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு தினத் தொடரில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இருஅணிகளுக்கும் இடையேயான முதல் ஒருதினப்போட்டியில் 1.4 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி 5 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். மேலும் ஒருதின அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்தார்.

 

வெளியான தேதி: 04.09.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive