CricketArchive

தில்ஹாரா பெர்னாண்டோ
by CricketArchive


Player:CRD Fernando

DateLine: 22nd August 2008

 

முழுப்பெயர்: கொன்கெனிக ரந்தி தில்ஹாரா பெர்னாண்டோ

 

பிறப்பு: 19 ஜூலை 1979. கொழும்பு, இலங்கை.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

அணியில் வீரரின் நிலை: பந்து வீச்சாளர்

 

பந்து வீச்சு முறை: வலதுகை வேகப்பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: இலங்கை, இலங்கை பிரசிடென்ட் லெவன், ஆசிய லெவன், சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப், மும்பை இந்தியன்ஸ்.

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: ஜூன் 14-17, 2000 அன்று இலங்கை - பாகிஸ்தான் இடையே கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி
ஒருதினப் போட்டி: ஜனவரி 9, 2001 அன்று இலங்கை - தென்னாப்பிரிக்கா இடையே பார்லில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஆகஸ்டு 17, 2004 அன்று பர்கெர் ரெக்ரியேஷன் கிளப் - சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் இடையே கொழும்புவில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர். இலங்கையின் தலைநகரான கொழும்புவில் பிறந்து வளர்ந்தவர். சமிந்தா வாஸிற்கு அடுத்து உள்ள வேகப்பந்து வீச்சாளர்.

 

1997-ல் இவர் இந்தியாவிற்கு எதிரான முதல்தரப்போட்டியில் அறிமுகமானார். இதன் பிறகு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் அணியில் விளையாடினார். இவரது வலுவான தோள்களும், பந்து வீசும் நேர்த்தியும், எதிராளி ரன் எடுக்கத் திணறும்படி பந்து வீசுவதும் இவருக்கு கைவந்த கலையாக ஆனது. இவரது பந்துவீச்சுத் திறமையை கண்டு கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் இவரை இலங்கை ஏ அணியில் சேர்த்தது.

 

மூன்று ஆண்டுகள் முதல் தரப்போட்டிகளிலும், இலங்கை ஏ அணியிலும் சிறப்பாக விளையாடியதன் காரணமாக 2000-ல் பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்தார். ஜூன் 14-17, 2000 அன்று இலங்கை - பாகிஸ்தான் இடையே கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அறிமுகமான முதல் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அது மட்டுமின்றி 4 விக்கெட்டுகளை தனது பீல்டிங் திறமையால் வெளியேற்றினார்.

 

இதன்பிறகு 2000-01-ல் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்தார்.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டி டிராவில் முடிந்தது. இது இவர் ஆடிய இரண்டாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஒருதின அரங்கில், இதே அணிக்கெதிரான முதல் ஒருதினப் போட்டியில் அறிமுகமானார்.

 

2001-ல் இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசி, முதல் இன்னிங்ஸில் 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி வெற்றி பெற்றது. மேலும் டெஸ்ட் அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்தார். டெஸ்ட் அரங்கில் இவரால் அதிகம் பிரகாசிக்க முடியவில்லை. ஆனால் ஒருதின அரங்கில் பிரகாசித்தார் எனலாம்.

 

சிறப்பாக இவர் ஆடினாலும், அடிக்கடி காயத்தால் அவதியுற்றார். இதனால் இலங்கை அணியில் இவரால் நிலையாக இடம்பெறமுடியவில்லை. காயம் குணமடைந்து இரண்டு தொடர்கள் விளையாடுவதும், பிறகு காயத்தால் அவதியுறுவதும் இவருக்கு வாடிக்கையாகிவிட்டது.

 

2005-ல் வங்கதேச அணிக்கெதிரான ஒருதினப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். 2007-ல் ஆசிய, ஆப்ரிக்கா கோப்பைக்கான ஒருதினப்போட்டியில் ஆப்பிரிக்க லெவன் அணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆசியலெவன் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

 

2007-ல் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருதினப்போட்டியில் அபாரமாக பந்துவீசி 27 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும் ஒருதின அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்தார். இதில் சிறப்பு என்னவென்றால் இலங்கை அணி முதலில் ஆடி 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிதான இலக்கை அடைய முயன்ற இங்கிலாந்து அணி 104 ரன்களில் சுருண்டது. இதற்கு இவரது சிறப்பான பந்துவீச்சு காரணமாக அமைந்தது.

 

இதையடுத்து 2007-ல், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.

 

அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரில் இடம்பிடித்து விளையாடினார். இதையடுத்து இந்திய அணியுடன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரிலும், செப்டம்பரில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடரிலும் இடம் பிடித்துள்ளார்.

 

வெளியான தேதி: 22 ஆகஸ்டு 2008.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive