CricketArchive

ரோஹித் சர்மா
by CricketArchive


Player:RG Sharma

DateLine: 18th August 2008

 

முழுப்பெயர்: ரோஹித் குருநாத் சர்மா

 

பிறப்பு: 30 ஏப்ரல் 1987. பன்சோட், நாக்பூர், மஹாராஷ்டிரா, இந்தியா.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: வலதுகை சுழற்பந்து வீச்சாளர்

 

அணியில் வீரரின் நிலை: ஆல் ரவுண்டர்

 

விளையாடிய அணிகள்: இந்தியா, இந்தியா ஏ, இந்தியா கிரீன், மும்பை, மும்பை பிரெசிடென்ட் லெவன், 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி, டெக்கான் சார்ஜர்ஸ்.

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: இன்னும் அறிமுகமாகவில்லை
ஒருதினப் போட்டி: ஜூன் 23, 2007 அன்று இந்தியா - அயர்லாந்து இடையே பெல்பாஸ்டில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஏப்ரல் 3, 2007 அன்று பரோடா - மும்பை இடையே மும்பையில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர். நடுவரிசை ஆட்டக்காரர். பேட்டிங்கிலும், சில சமயங்களில் சுழற்பந்து வீச்சிலும் அசத்துபவர்.

 

சச்சின் தெண்டுல்கரை கொடுத்த, அதே மும்பை மாநகரத்தில் பிறந்தவர். அங்குள்ள வேளாங்கன்னி உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இங்கு சிறப்பாக பயின்றதால் ஸ்காலர்ஷிப் மூலம் விவேகானந்தர் சர்வதேச பள்ளியில் மேல்நிலை படிப்பை தொடர்ந்தார். அவருக்கிருந்த கிரிக்கெட் திறமையை கண்டுகொண்ட அப்பள்ளி நிர்வாகம், அவருக்கு சிறப்பு பயிற்சி அளித்தது. மேலும் அங்குள்ள பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளிலும் இவரை களமிறக்கி விளையாட வைத்தது.

 

இதனால் 17 வயதிற்குட்பட்டோருக்கான மும்பை அணியில் இடம்பிடித்தவர், பின்னாளில் 17 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியிலும், 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.

 

2006-ல், இலங்கையில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் இடம் பிடித்தார். 6 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்கள் உள்பட 205 ரன்கள் எடுத்தார்.

 

இதன் பிறகு ரஞ்சி போட்டிகளில் விளையாடினார். இந்தியா ஏ அணியில் இடம் பிடித்து சிறப்பாக விளையாடினார். மும்பை அணி சார்பாக இவர் விளையாடிய குஜராத்திற்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் 267 பந்துகளில் 205 ரன்கள் குவித்து அசத்தினார்.

 

இதனால் இந்திய தேர்வாளர்கள் கவனத்தை ஈர்த்தார். அதன் விளைவாக ஜூன் 2007 -ல் அயர்லாந்து சென்ற இந்திய அணியில் இடம் பிடித்தார். ஜூன் 23, 2007 அன்று இந்தியா - அயர்லாந்து இடையே பெல்பாஸ்டில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் முதன்முதலாக சர்வதேச ஒருதினப் போட்டியில் அறிமுகமானார். 2007-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்தார். இப்போட்டியில் 20 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.

 

2007-08 இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ஒருதினப்போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். இத்தொடரின் முதல் இறுதிப்போட்டியில் சச்சின் தெண்டுல்கருடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். 87 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அசத்தினார். இத்தொடரில் இரண்டு அரைசதங்கள் உள்பட 235 ரன்கள் குவித்தார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார். இத்தொடரில் 4 அரைசதங்கள் உள்பட 404 ரன்கள் குவித்தார்.

 

2008-ல் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரில் ஒரு அரைசதம் உள்பட 116 ரன்கள் குவித்தார்.

 

அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்து, ஒருதினப்போட்டியில் மட்டும் விளையாடினார்.

 

கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive