- HOME
- ARCHIVE
- PARTNER SITES
- SEARCH
- ON THIS DAY
- MILESTONES
- CONTACT
- THE CRICKETER
| Player: | RS Dravid |
முழுப்பெயர்: ராகுல் சரத் திராவிட்
 
பிறப்பு: ஜனவரி 11, 1972. இந்தூர், மத்தியபிரதேசம், இந்தியா. 
மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர் 
பந்து வீச்சு முறை: வலதுகை சுழற்பந்து வீச்சாளர் 
அணியில் வீரரின் நிலை: மட்டை வீச்சாளர், சில நேரங்களில் விக்கெட் கீப்பர். 
விளையாடிய அணிகள்: இந்தியா, ஆசிய கிரிக்கெட் லெவன், பெங்களூர், சர்வதேச லெவன், ஸ்காட்லாந்து, கென்ட், கர்நாடகா, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். 
அறிமுகம்: 
டெஸ்ட் போட்டி: ஜூன் 20-24, 1996, இந்தியா - இங்கிலாந்து இடையே லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி. 
இந்திய அணியின் தூண், இந்திய அணியின் சுவர். இந்திய அணியின் மிகச்சிறந்த 3 ஆட்டக்காரர்களில் ஒருவர். மிகச் சிறந்த வலதுகை ஆட்டக்காரர். இவரது நுணுக்கமான ஆட்டம் எதிரணியை திணறடிக்கும். டெஸ்ட் போட்டிகளில் இவர் களத்தில் நின்றால் எதிரணிக்கு தலைவலிதான். அவ்வளவு திறமை வாய்ந்த வீரர். இந்திய அணியின் வெற்றிகரமான முன்னாள் கேப்டன்களில் ஒருவர் ராகுல் திராவிட். 
சர்வதேச அரங்கில் ஏப்ரல் 3, 1996 அன்று இந்தியா - இலங்கை இடையே சிங்கப்பூரில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் முதன்முதலாக அறிமுகமானார். ஆனால் ஒருதினப்போட்டியின் துவக்கம் அவருக்கு சரியாக அமையவில்லை. 
டெஸ்ட் போட்டியிலும் இவர் இதே ஆண்டில்தான் அறிமுகமானார். இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற, அந்நாட்டிற்கு எதிரான 2- வது டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக களமிறங்கி 95 ரன்கள் எடுத்துக் காட்டினார். இதில் குறிப்பிடத்தக்கவேண்டிய மற்றொரு அம்சம் எதுவெனில். இதே போட்டியில்தான் சௌவுரவ் கங்குலியும் முதன் முதலாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். 
1998-ல் நியுசிலாந்துடனான இலண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தினார். 
2001-ல் ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 171 ஆட்டமிழந்து பாலோ ஆன் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் வி.வி.எஸ். லட்சுமணுடன் (243 ரன்கள்) ஜோடி சேர்ந்த திராவிட் (180 ரன்கள்)ஆட்டத்தையே மாற்றிக் காட்டினார். இப்போட்டியில் தோல்வியின் விளிம்பிலிருந்த இந்திய அணி இவ்விருவரின் அபாரமான ஆட்டத்தால் 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இதற்கு முன் இவரது ஆட்டத்திறமையை கடுமையாக விமர்சித்தவர்களெல்லாம் இப்போட்டிக்குப் பிறகு வாயார பாராட்டினர். 
2001-ல் ஜிம்பாப்வேயுடன் மோதிய டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில், முதன் முதலாக இரட்டை சதம் விளாசினார். அது மட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கெதிரகவும், நியூசிலாந்து அணிக்கெதிராகவும், ஆஸ்திரேலிய அணிக்கெதிராகவும், பாகிஸ்தான் அணிக்கெதிராகவும் இரட்டை சதங்களை விளாசியுள்ளார். இவரது திறமையான ஆட்டத்தால் இப்போட்டிகளில் இந்திய அணி வென்று காட்டியது. 
1999-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், சச்சினுடன் (186 ரன்கள்) ஜோடி சேர்ந்து 153 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே ஒருதினப் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன்களாகும். இதே போட்டியில்தான் சச்சினும் தனது ஒருதினப் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார். 
2005 அக்டோபரில் இந்திய அணியின் தலைவராக பொறுப்பேற்றார். இவரது தலைமையிலான இந்திய அணி தாயக மண்ணில் இலங்கை அணியை 5-1 என்ற கணக்கில் வென்று காட்டியது. அதன்பின், கங்குலிக்குப் பிறகு டெஸ்ட் அணியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். 
2007-ல் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்திடம் தோல்வியுற்று முதல் சுற்று ஆட்டத்திலேயே வெளியேறியது. இதனால் திராவிட் தலைமை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 
இருப்பினும் 2007-ல், தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரையும், இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் இவரது தலைமையில் இந்திய அணி வென்றது. 
இதன்பிறகு வீரர்களுக்கிடயே சுமுக உறவு நீடிக்காததால் தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை துறந்தார். 
டெஸ்ட் போட்டிகளில் 25 சதங்கள், 52 அரைசதங்கள் உள்பட 10000 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ரன்கள் எடுத்த சர்வதேச வீரர்கள் வரிசையில் 5-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார். இவ்வரிசையில் முதலிடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிரையன் லாரா முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்கள் வரிசையில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளார் திராவிட். முதல் இடத்தில் சச்சின் உள்ளார். 
ஒருதினப் போட்டிகளில் 12 சதங்கள், 81 அரைசதங்கள் உள்பட 10500 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ரன்கள் எடுத்த சர்வதேச வீரர்கள் வரிசையில் 6-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார். இவ்வரிசையில் முதலிடத்தில் சச்சின் உள்ளார். 
மேலும் டெஸ்ட் மற்றும் ஒரு தினப் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்த சர்வதேச வீரர்களின் வரிசையில் 4 வது வீரராகவும் இடம்பிடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக தலைமையேற்று அணியை வழிநடத்திச் சென்றார். 
இவர் திறமை வாய்ந்த வீரர் என்பது மட்டுமல்ல, சுனில் கவாஸ்கரைப் போல் களத்தில் அதிக நேரம் நின்று அற்புதமாக விளையாடக் கூடியவர். இவரது ஆட்டமுறை இளைஞர்களுக்கு நல்ல பாடமாகும். எவ்வளவு வேகமாக பந்தை எறிந்தாலும், அநாசயமாக அதை தடுத்து ஆடுவதில் வல்லவர். இந்திய அணியின் சுவர். 
அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்து விளையாடினார். 
கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08