CricketArchive

ஹாங்காங்கை சுருட்டியது இந்தியா!
by CricketArchive


Scorecard:Hong Kong v India
Player:SK Raina
Event:Asia Cup 2008

DateLine: 27th June 2008

 

போட்டி: 50 ஓவர்கள் போட்டி (பகலிரவுப் போட்டி)
இடம் : நேஷனல் மைதானம். கராச்சி, பாகிஸ்தான்.
தேதி: 25.06.2008. புதன்கிழமை.
மோதிய அணிகள்: இந்திய அணி - ஹாங்காங் அணி
முடிவு: 256 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
ஆட்ட நாயகன்: சுரேஷ் ரெய்னா

 

வணக்கம்

 

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய அணி, ஹாங்காங் அணியை 256 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி அரை இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை பிரகாசப் படுத்திக் கொண்டது.

 

இவ்வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி அசத்தலாக துவக்கியுள்ளது. கேப்டன் மஹேந்திரசிங் தோனி மற்றும் ரெய்னா சதம் கடக்க, ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையையும் இந்திய அணி படைத்தது. பியூஷ் சாவ்லா சுழலில் சிக்கிய ஹாங்காங் அணி 118 ரன்களுக்கு சுருண்டது. 256 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, ஒரு நாள் அரங்கில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இரண்டாவது அணி என்ற சாதனையையும் தன்வசம் சேர்த்து கொண்டது.

 

இந்திய அணியில் யுவராஜ்சிங்கிற்குக்கு பதிலாக ராபின் உத்தப்பா சேர்க்கப்பட்டார். அதிக முக்கியத்துவம் இல்லாத போட்டி என்பதால் இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு, புதுமுகம் மன்பிரீத் கோனி சர்வதேச ஒருதினப் போட்டிகளில் முதன்முதலாக அறிமுகமானார்.

 

இன்று ‘பி’ பிரிவில் நடந்த இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் இந்திய அணி, ஹாங்காங் அணியை எதிர் கொண்டது. பூவா தலையா வென்ற இந்திய அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

 

வீரேந்திர ஷேவாக், கௌதம் காம்பிர் வெற்றி கூட்டணி ஆட்டத்தை துவக்கியது. வழக்கம் போல் அணிக்கு இந்த ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. முதல் ஓவரில் காம்பிர் இரண்டு பவுண்டரிகள் அடிக்க, ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. ஹைதர் வீசிய மூன்றாவது ஓவரில் வீரேந்திர ஷேவாக் மூன்று பவுண்டரிகள் விளாசி, தனது அதிரடியை ஆரம்பித்தார். மேலும், இர்பான் அகமது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் உட்பட 18 ரன்கள் எடுத்தார். ஹாங்காங் பந்துவீச்சை தொடர்ந்து வெளுத்து வாங்கிய இவர் நதீம் பந்தில் பவுண்டரி அடித்து, ஒரு நாள் அரங்கில் தனது 28வது அரைசதத்தைக் கடந்தார்.

 

இந்த ஜோடி இருபது ஓவர் போட்டி போல் விளையாட, இந்திய அணி 10.5 ஓவரில் 100 ரன்களை தாண்டியது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 127 ரன்கள் எடுத்த நிலையில் வீரேந்திர ஷேவாக் ஆட்டமிழந்தார். இவர் 2 சிக்சர்கள், 13 பவுண்டரிகள் உட்பட 44 பந்தில் 78 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த காம்பிர் 54 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர் இப்போட்டியில் தனது 9 வது அரைசதத்தைக் கடந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

 

மூன்றாவது வீரராக வந்த ரோஹித் சர்மா மிகவும் மந்தமாக விளையாடினார். இதனால் 15 முதல் 25 வரையிலான 10 ஓவர்களில் இந்திய அணியால் வெறும் 22 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரோஹித் சர்மா 29 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்தபோது தேவையில்லாமல் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

 

அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, மஹேந்திரசிங் தோனியுடன் ஜோடி சேர்ந்தார். துவக்கத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி மெல்ல அதிரடிக்கு மாறியது. முனிர் தார் வீசிய 36வது ஓவரில் ரெய்னா 2 பவுண்டரிகளும், தோனி ஒரு சிக்சரும்அடித்தனர்.

 

தொடர்ந்து ஹாங்காங் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய தோனி நதீம் பந்தில் 2 சிக்சர்கள் அடித்தார். ஷகாவத் வீசிய அடுத்த ஓவரில் ரெய்னா 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரி உட்பட 25 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இந்திய அணியின் எண்ணிக்கை மீண்டும் எகிறத் துவங்கியது. அதிரடியை தொடர்ந்த ரெய்னா, இர்பான் அகமது பந்தில் ஒரு இமாலய சிக்சர் விளாசி, ஒரு நாள் போட்டிகளில் தனது முதல் சதத்தைக் கடந்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தநிலையில் ரெய்னா, அப்சல் ஹைதர் பந்தில் இர்பான் அஹமதிடம் பிடி கொடுத்து வெளியேறினார். இவர் 68 பந்துகளில் 5 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 101 ரன்கள் எடுத்தார். 66 பந்துகளில் இப்போட்டியில் சதமடித்ததால் சுரேஷ் ரெய்னா குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். முதல் இடத்தில் முகமது அசாருதின் உள்ளார். அவர் 62 பந்துகளில் சதமடித்துள்ளார்.

 

மறுமுனையில் விளாசலை தொடர்ந்த தோனி, இந்திய அணி 350 ரன்களை எட்ட முக்கிய காரணமாக இருந்தார். பொறுப்பான கேப்டன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்த தோனி ஒரு நாள் அரங்கில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். கடைசி பந்தில் ராபின் உத்தப்பா ‘இமாலய சிக்சர்’ அடிக்க, இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனை படைத்தது. முன்னதாக கொழும்புவில் நடந்த ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் எடுத்த 343 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.

 

மஹேந்திரசிங் தோனி 96 பந்துகளில் 6 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 109 ரன்களுடனும் , ராபின் உத்தப்பா 9 பந்துகளில் ஒரு சிக்ஸர் உள்பட 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

கடின இலக்கை எட்ட முனைந்த ஹாங்காங் அணி துவக்கத்திலிருந்தே சொதப்பியது. தபாரக் 21, அட்கின்சன் 23, இர்பான் அகமது 25 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். சுழலில் கலக்கிய பியூஷ் சாவ்லா 4 விக்கெட் கைப்பற்றினார். ஹாங்காங் 36.5 ஓவரில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

இதனால் இந்திய அணி 256 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது தான் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது பெரிய வெற்றியாகும். முதலிடமும் இந்திய அணி வசம் தான் உள்ளது. 2007 உலக கோப்பை தொடரில் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த பெர்முடாவுக்கு எதிரான தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

 

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக சுரேஷ் ரெய்னா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

நன்றி, வணக்கம்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive