CricketArchive

ஆறுதல் வெற்றியை பெற்றது மும்பை அணி
by CricketArchive


Scorecard:Royal Challengers Bangalore v Mumbai Indians
Player:CRD Fernando
Event:Indian Premier League 2007/08

DateLine: 29th May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (பகலிரவுப் போட்டி), 55 -வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்:சின்னசாமி கிரிக்கெட் மைதானம், பெங்களூர்.
தேதி: 28.05.2008. புதன் கிழமை.
மோதிய அணிகள: பெங்களூர் அணி - மும்பை அணி
முடிவு: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி
ஆட்ட நாயகன்: தில்ஹாரா பெர்னாண்டோ

 

வணக்கம்

 

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டியின் 55-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று மாலை பெங்களூரிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பெங்களூர் அணியும் மும்பை அணியும் மோதின.

 

இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் முக்கியமில்லாத போட்டியில் ஆறுதல் வெற்றி தேடி களமிறங்கின. முன்னதாக பெங்களூரில் மழை பெய்ததால் போட்டி துவங்க தாமதமானது. இதையடுத்து 18 ஓவர்கள் கொண்ட போட்டி நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

 

பெங்களூர் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. வாசிம் ஜாபர் மற்றும் ஜாக் காலிஸ் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக பிரவீண் குமார் மற்றும் மார்க் பவுச்சர் இடம்பிடித்தனர்.

 

மும்பை அணியில் ரோகன் ராஜேவின் இடத்தை தாவல் குல்கர்னி பிடித்தார்.

 

மழை பெய்திருந்ததால் பூவா தலையா வென்ற மும்பை அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கர், சமயோசிதமாக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 

அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. பெங்களூர் அணிக்கு துவக்க வீரர்களாக மார்க் பவுச்சரும், கோஸ்வாமியும் களமிறங்கினர். மும்பை அணியின் ஷான் பொல்லாக் மற்றும் ஆசிஷ் நெஹ்ரா பந்துவீச்சை இந்த ஜோடி எளிதாக சமாளித்தது.

 

இதையடுத்து சச்சின், பெர்னாண்டோவை பந்துவீச அழைத்தார். வேகத்தில் மிரட்டிய இவர் பவுச்சரை வெளியேற்றி அசத்தினார். 3 பவுண்டரி அடித்த பவுச்சர் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் மிஸ்பா உல் ஹக்கை 0 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து, பெங்களூர் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

 

இவரது அடுத்த ஓவரின் முதல் பந்தில் கோஸ்வாமியும் ஆட்டமிழக்க, பெங்களூர் அணி சொந்த மண்ணில் ரன் எடுக்க திணறத் துவங்கியது. கோஸ்வாமி கணக்கில் 20 ரன்கள் அடங்கும்.

 

அடுத்து வந்த கேமரான் ஒயிட், பெங்களூர் அணியின் கேப்டன் ராகுல் திராவிட்டுடன் ஜோடி சேர்ந்தார். குல்கர்னி வீசிய 11வது ஓவரில் அதிரடியைக் காட்டிய கேமரான் ஒயிட் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் உள்பட 18 ரன்கள் எடுத்தார்.

 

அதிரடியாக ஆடிய கேமரான் ஒயிட் தொடர்ந்து விளாசுவார் என உள்ளூர் ரசிகர்கள் எதிர்பார்த்த போது அடுத்த ஓவரில் பெவிலியன் திரும்பி ஏமாற்றினார். இவர் 20 பந்தில் 26 ரன்கள் எடுத்தார்.

 

மறுமுனையில் மந்தமாக விளையாடிய ராகுல் திராவிட் 16 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த போது டிவைன் ஸ்மித் பந்து வீச்சில் ஸ்டம்புகளைப் பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இதன்பிறகு வந்த வீரர்களும் நிலைத்து நின்று ஆடவில்லை. பாலச்சந்திர அகில் 5 ரன்கள் எடுத்தும், வினய் குமார் 23 ரன்கள் எடுத்தும், விராட் கோஹ்லி ரன் ஏதும் எடுக்காமலும், பிரவீண் குமார் 8 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

 

பெங்களூர் அணி 18 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது.

 

மும்பை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய தில்ஹாரா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், டிவைன் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும், ஆசிஷ் நெஹ்ரா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு சனத் ஜெயசூர்யா, சச்சின் தெண்டுல்கர் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது.

 

ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி மெல்ல அதிரடிக்கு மாறியது. அசத்தலாக ஆடிய ஜெயசூர்யா, பிரவீண் குமார் பந்துவீச்சில் இமாலய சிக்சர் அடித்து மிரட்டினார். விளாசலை தொடர்ந்த இவர் வினய் குமார் வீசிய 8வது ஓவரில் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடித்து கலக்கினார்.

 

கும்ப்ளே ஓவரையும் விட்டு வைக்காத ஜெயசூர்யா அவர் வீசிய 9வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். மறுமுனையில் சச்சின் இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார்.

 

கும்ளே வீசிய 11வது ஓவரின் முதல் பந்தில் சூப்பர் சிக்ஸர் அடித்து ஜெயசூர்யா அரைசதம் கடந்தார். அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் சச்சின் சிக்சர் விளாச, அணியின் எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்தது.

 

பெங்களூர் அணியின் பந்துவீச்சை வாணவேடிக்கை காட்டிய சனத் ஜெயசூர்யா 37 பந்துகளில் 4 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து வந்த ராபின் உத்தப்பா, டேல் ஸ்டெயின் பந்துவீச்சில் சிக்சர் அடித்து அசத்தினார்.

 

கும்ப்ளே வீசிய 16வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றி தேடி தந்தார் சச்சின் தெண்டுல்கர்.

 

சச்சின் 43 பந்துகளில் 1 சிக்சர், 4 பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் எடுத்தும், ராபின் உத்தப்பா 16 பந்துகளில் 1 சிக்சர், 2 பவுண்டரிகள் உள்பட 19 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

மும்பை அணி 16 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்து, ஆறுதல் தேடி கொண்டது.

 

நன்றி, வணக்கம்.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2018 CricketArchive