CricketArchive

அரை இறுதிக்குள் நுழைந்தது ராஜஸ்தான் அணி
by CricketArchive


Scorecard:Kolkata Knight Riders v Rajasthan Royals
Player:YK Pathan
Event:Indian Premier League 2007/08

DateLine: 20th May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (இரவுப் போட்டி), 44-வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்: ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா.
தேதி: 20.05.2008. செவ்வாய்க் கிழமை.
மோதிய அணிகள்: ராஜஸ்தான் - கொல்கத்தா
முடிவு: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி
ஆட்ட நாயகன்: யூசுப் பதான்

 

வணக்கம்

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டியின் 44-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

கடந்த போட்டியில் விளையாடிய கொல்கத்தா வீரரான சோயிப் அக்தர் உடல் தகுதி பெறாததால் அவருக்கு பதிலாக உமர் குல் சேர்க்கப்பட்டார்.

ராஜஸ்தான் அணியில் கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்கள்தான் இப்போட்டியிலும் களமிறங்கினர்.

பூவா தலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனால் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது.

சல்மான் பட்டுடன் துவக்க ஆட்டக்காரராக முகமது ஹபீஸ் களமிறங்கினார். வழக்கம் போல் இப்போட்டியிலும் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சு மற்றும், பீல்டிங் சிறப்பாக இருந்ததால், ஆரம்பத்தில் இருந்தே கொல்கத்தா அணி ரன் சேர்க்கத் திணறியது.

நிதானமாக ஆடிய கொல்கத்தா வீரர் முகமது ஹபீஸ் 4 ரன்கள் எடுத்திருந்தபோது முனாப் படேல் பந்து வீச்சில் அஸ்னோத்கரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து சல்மான் பட்டுடன் கொல்கத்தா அணியின் கேப்டன் சௌரவ் கங்குலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை மெதுவாக உயர்த்தினர்.

சல்மான் பட் 20 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்பட 24 ரன்கள் எடுத்திருந்த போது முனாப் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து கங்குலியுடன் டேவிட் ஹஸி ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய டேவிட் ஹஸி 11 ரன்கள் எடுத்திருந்த போது யூசுப் பதான் பந்து வீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

சொந்த மண்ணில் களமிறங்கிய கங்குலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் நிதானமாக ஆடி 34 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து அணியில் அதிக பட்சமாக டி.பி.தாஸ் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஏனைய வீரர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும்படி ஆடவில்லை.

லக்ஷ்மி சுக்லா 15 ரன்களும், அஜித் அகார்கர் 5 ரன்களும், உமர் குல் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

விரித்தமன் சஹா 11 ரன்களுடனும், இஷாந்த் சர்மா 2 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆட்ட நேர முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் அணி சார்பில் ஷோஹைல் தன்வீர் 3 விக்கெட்டுகளையும், முனாப் படேல் 2 விக்கெட்டுகளையும், சித்தார்த் திரிவேதி, யூசுப் பதான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 20 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய ராஜஸ்தான் அணி 16.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேம் ஸ்மித்தும், ஸ்வப்னில் அஸ்நோத்கரும் களமிறங்கினர்.

கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அஸ்நோத்கர் இப்போட்டியில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து கிரேம் ஸ்மித்துடன், பந்துவீச்சாளரான ஷோஹைல் தன்வீர் ஜோடி சேர்ந்தார்.

கிரேம் ஸ்மித் நிதானமாக ஆட, ஷோஹைல் தன்வீர் அதிரடியாக ஆடினார். தன்வீர் 8 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி உள்பட 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்ததும் அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் கிரேம் ஸ்மித்தும் ஆட்டமிழந்தார். அவர் 24 ரன்கள் எடுத்தார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் உமர் குல் வீழ்த்தினார்.

இவர்களையடுத்து முகமது கைப்பும், ஷேன் வாட்சனும் ஜோடி சேர்ந்தனர். ஷேன் வாட்சன் 15 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் உள்பட 19 ரன்கள் எடுத்திருந்த போது கங்குலி பந்து வீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து முகமது கைப் உடன் யூசுப் பதான் ஜோடி சேர்ந்தார். இவர்களிருவரும் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தனர். 16. 3 ஒவர்கள் முடிவிலேயே ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கான 148 ரன்களை எட்டியது.

முகமது கைப் 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் உள்பட 34 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். யூசுப் பதான் அதிரடியாக ஆடி 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 48 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ஆணி 11 ஆட்டங்களில் 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகள் எடுத்து அரை இறுதிக்குத் தகுதி பெறும் முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

நன்றி, வணக்கம்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive